அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு

ரஷியாவின் உளவாளிகள் என 60 தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூடவும் உத்தரவிடப்பட்டது.
அமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என அமெரிக்கா கூறிஉள்ளது.

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ரஷியாவின் செயல்தான் என ஸ்திரமாக கூறிய இங்கிலாந்து ரஷியாவின் 23 தூதரக அதிகாரிகளை உளவுத்துறையினர் என வெளியேற்றியது. ரஷியாவும் பதிலுக்கு இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ஆனால் விஷத்தாக்குதலை ரஷியா மறுத்தது. இவ்விவகாரத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவாக ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு கரம் நீட்டியது. இப்போது அமெரிக்காவும் உளவாளிகள் என ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷிய தூதரத்தை மூடவும் உத்தரவிட்டது. இதில் ஐ.நா.விற்கான ரஷியாவின் நிரந்தர மிஷனில் இடம்பெற்ற 12 அதிகாரிகளும் அடங்குவார்கள். “அமெரிக்காவில் இருந்து ரஷியாவின் உளவுத்துறை அதிகாரிகளை வெளியேற்றும்படி அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். எங்களுடய நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போயிங் தளம் அருகே உள்ள சியாட் தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டு உள்ளார்,” என வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் சாரக் சாண்டர் கூறிஉள்ளார்.

ரஷிய தூதரக அதிகாரிகள் அனைவரும் அந்நாட்டு உளவுத்துறையுடன் தொடர்பில் உள்ளார்கள், அவர்கள் குடும்பத்துடன் வெளியேற 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் செர்ஜய் ஸ்கிர்பாலுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக அமெரிக்கா இந்நடவடிகையை எடுத்து உள்ளது.