அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களின் கூட்டாளிகள்: துருக்கி

அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கூட்டளிகள் என்று துருக்கி பிரதமர் பினாலியில் திரிம் விமர்சித்துள்ளார்.

ஜெருசலேமில் அமெரிக்க தூதரக அலுவலகம் திறக்கப்படுவதை எதிர்த்து பாலஸ்தீனர்கள் திங்கட்கிழமை காஸா எல்லையில் போராட்டம் நடத்தினர். இதில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாவும், 2,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் பாலஸ்தீனம் தெரிவித்தது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதலை துருக்கி கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி பிரதமர் பினாலில் பினாலியில் திரிம் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டது. அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கூட்டாளிகளாக உள்ளனர்” என்று கூறினார்.

கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.

பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால், இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

ட்ரம்பின் இந்த முடிவை பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா தனது முடிவிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனம் – அமெரிக்கா இடையே உறவு முற்றிலுமாக சிதைந்தது குறிப்பிடத்தக்கது.