அப்துல் கலாம் மணிமண்டபத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத்தையும் தொடங்குகிறார்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினை விடத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கி றார். மேலும், ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத் தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருடன் அதிகபட்ச பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு, கலாம் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என 2015-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சுமார் ரூ.20 கோடி மதிப்பில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பில் மணிமண்டபம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11.30 மணிக்கு நாட்டுக்கு அர்ப்பணிக் கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடையும் பிரதமரை, தமிழக முதல்வர், ஆளுநர் ஆகியோர் வரவேற்கின்றனர். பிறகு, மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மண்டபம் முகாம் வந்தடை கிறார்.

அங்கிருந்து காரில் பேக்கரும்பு பகுதிக்கு காலை 11.30 மணியளவில் வரும் பிரதமர், கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்துகிறார். கலாமின் சிந்தனைகளை பரவலாக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் அடங்கிய ‘கலாம் விஷன் 2020 சந்தேஷ் வாஹினி’ பிரசாரப் பேருந் தையும் தொடங்கி வைக்கிறார்.

பின்னர், மண்டபம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை குடியிருப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி விரைவு ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக் கிறார். மேலும், ‘நீலப்புரட்சி’ திட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான உத்தர வுகளை மீனவர்களுக்கு வழங் கியும், பசுமை ராமேசுவரம் திட்ட மலரை வெளியிட்டும் பிரதமர் பேசுகிறார். இதைத் தொடர்ந்து, 2.35 மணியளவில் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு புதுடெல்லி சென்றடை கிறார்.

பிரதமரின் ராமேசுவரம் வருகையையொட்டி 3 ஐ.ஜி.கள், 4 டி.ஐ.ஜி.கள், 9 எஸ்.பி.கள், 21 ஏ.டி.எஸ்.பி.கள், 34 டி.எஸ்.பி.க்கள் மற்றும் மத்திய, மாநில உளவுப் பிரிவினர் என 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட காவல் துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர்.

கலாம் அக்தர் பேழை மோடிக்கு பரிசளிப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு, கலாமின் மூத்த அண்ணன் முத்து மீரா மரைக்காயர், தனது சகோதரர் கலாம் பாதுகாத்த அக்தர் பேழையை பரிசாக வழங்க உள்ளார். அண்ணன் முத்து முகம்மது மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த நாளில் அவருக்கு பரிசளிக்க, இந்த அக்தர் ராஜஸ்தானில் வாங்கி கலாம் பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால், சகோதரரின் பிறந்த நாளுக்கு முன்னரே காலமாகி விட்டார்.

இந்த வாசனைத் திரவியங்கள் அடங்கிய அக்தர் பேழையினை, கலாமின் உதவியாளர் ஷெரிட்டன், கடந்த ஆண்டு முத்து மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த நாளில் வழங்கி கலாமின் விருப்பத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.