அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றுக: அன்புமணி

தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இது ஏமாற்றமளிக்கிறது.
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வான நீட்டிலிருந்து எந்த மாநிலத்திற்கும் விலக்களிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டதாகவும், அதைப் பொருட்படுத்தாமல் தமிழக அரசு சட்டம் இயற்றி அதற்கான ஒப்புதலுக்காக காத்துக்கிடந்ததால் ஏற்பட்ட தாமதத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத் திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், இந்தத் தேர்விலிருந்து விலக்கு கிடைத்து விடும்; அதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர்ந்து விடலாம் என்று நம்பிய மாணவர்களின் இதயத்தில் இந்த அறிவிப்பு இடியை இறக்கியுள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான சட்டத்திருத்த மசோதா கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இன்றுவரை 73 நாட்களாகி விட்ட நிலையில் தமிழக சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வமாக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.