அனுஷ்காவுக்கு எப்போது திருமணம்?

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, அமைதியான சுபாவம், ஆக்ரோஷமான நடிப்பு.. போன்றவைகளின் கலவையாக காட்சியளிப்பவர், நடிகை அனுஷ்கா ஷெட்டி.

குடும்பம், திருமணம், எதிர்காலம் பற்றி அவர் சொல்கிறார்:

*கர்நாடகாவில் நான் பிறந்தேன். என் பெற்றோர் வித்தல் ஷெட்டி- பிரபுல்லா. குணராஜ் ஷெட்டி, சாய் ரமேஷ் ஷெட்டி என்ற இரு சகோதரர்கள் எனக்கு உண்டு. எனது யோகா குரு பரத் தாகூருக்கு என் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். பட்டப்படிப்பு முடித்த பின்பு சிறிது காலம் யோகா ஆசிரியையாக வேலை பார்த்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு திரை உலகத்தை பற்றி எதுவுமே தெரியாது.

*2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். நாகார்ஜூனா கதாநாயகன். பின்பு மூன்று படங்களில் அவரோடு நடித்தேன். முதல் காட்சியில் நடித்தபோது பரபரப்பும், பதற்றமும் என்னிடம் காணப்பட்டது. நாகார்ஜூனா ரொம்ப இயல்பான நடிகர். தொடக்கத்தில் இருந்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழிநடத்திய குரு. இன்று சினிமாவில் நான் ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால், அதில் அவருக்கும் பங்குஉண்டு. இன்னும் அவரோடு இணைந்து நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

*பாகுபலிக்காக வாள் சண்டை, அம்பு எய்தல், குதிரை சவாரி போன்ற நிறைய பயிற்சிகள் பெற்றேன். அவற்றை என் வாழ்க்கையில் கிடைத்த சம்பாத்தியமாக கருதுகிறேன்.

*என்னுடைய ரோல்மாடல் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட முடியாது. ஏன்என்றால் பலரிடமிருந்து நாம் நல்ல குணங்களையும், நல்ல கருத்துக்களையும் பெறுகிறோம். சிறு வயதில் அம்மாவும், அப்பாவும் ரோல் மாடலாக இருந்தார்கள். இப்போதும் எனது சக்தியாக அவர்கள்தான் இருந்துகொண்டிருக்கிறார் கள். நான் படித்த பள்ளியின் முதல்வர் பிளாரன்ஸ் ஈஸ்ட்வுட் என்னை கவர்ந்தவர். 17 வருடங்களாக யோகா குரு பரத் தாகூரின் சீடராக இருக்கிறேன்.

*யோகா எனக்கு மிகுந்த பலன்களை தந்துகொண்டிருக்கிறது. நான் இயற்கையாகவே சுறுசுறுப்பானவள். கோபமும், கவலைகளும் எனக்கும் உண்டு. கோபம் வந்தால் வெளிக்காட்டிவிடுவேன். என் இயற்பெயர் சுவீட்டி. நீங்கள் திரையில் பார்க்கும் அனுஷ்கா போன்றவள் அல்ல சுவீட்டி. நான் எப்படிப்பட்டவள் என்பது குடும்பத்தினருக்கும், நெருக்கமான உறவினர்களுக்கும் மட்டுமே தெரியும்.

*இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடையை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. உடல் எடையை வைத்துதான் பலரும் தன்னம்பிக்கையை அளக்கிறார்கள். அதிக உடல் எடை நல்லதல்ல. எல்லோரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நடிகைகள் மிக கடினமாக உடற்பயிற்சிகளை செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாங்கள் நல்ல கதைக்காக நிறைய ‘ரிஸ்க்’ எடுக்கிறோம். ஆனால் என் அனுபவத்தில் நான் உணர்ந்துகொண்ட உண்மை என்னவென்றால், திடீரென்று உடல் எடையை அதிகரிப்பதும், குறைப்பதும் உடலுக்கு நாம் செய்யும் கெடுதலாகும்.

*வங்கியில் பணிபுரியும் பெண்ணிடமோ, தொழிலதிபராக இருக்கும் பெண்ணிடமோ, திருமணத்திற்கு பிறகு வேலையில் தொடர்வீர்களா? என்று யாரும் கேட்பதில்லை. நடிப்பும் அதுபோன்ற ஒரு வேலைதான். திருமணத்திற்கு பின்பு நடிப்பதா, வேண்டாமா என்பது நாமும், நமது குடும்பமும் எடுக்கவேண்டிய தீர்மானம். வேலையையும், குடும்பத்தையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ‘பேலன்ஸ்’ செய்கிறார்கள். இப்போது சினிமா மாறிக்கொண்டிருக்கிறது. பெண் கதாபாத்திரங்களின் தன்மையும் மாறிக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிக்கும் நடிகைகள் விஷயத்திலும் அந்த மாற்றங் களின் தாக்கம் இருக்கும்.

சினிமா பரபரப்புகளுக்கு மத்தியில் நான் திருமணத்தை மறந்து விடவில்லை. கொஞ்சம் தாமதமானாலும் கடவுள் என் வாழ்க்கையில் மிக சிறந்ததையே தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திருமணம் செய்துகொள்ளும் ஆசை எனக்குஉண்டு. எனது திருமணத்தை பற்றி அறிய எல்லோரும் ஆர்வமாக இருப்பது எனக்கு தெரியும். நல்லது நடக்க நீங்களும் பிரார்த்தியுங்கள். நாம் திட்டமிட்டு அதுபோல் நடக்கிற காரியம் அல்ல திருமணம். நடக்கவேண்டிய நேரத்தில் அது நடக்கட்டும்.