அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் சசிகலா அணிக்கு யார் தலைமை வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. சசிகலா தலைமையில் கூவத்தூரில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

————————————

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் கூவத்தூர் செல்கிறார்

தற்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் கூவத்தூரில் உள்ள எம்.எல் ஏக்களை சந்திக்க செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்பதில் காபந்து முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

இருவரும் ஆதரவாளர்களை திரட்டும் நடவடிக்கையிலும், ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக இருவரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து கவர்னர் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. சசிகலாவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தும், ஆட்சி அமைக்க அவரை அழைக்காமல் கவர்னர் தாமதப்படுத்துவதாக சசிகலா தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இதனால் கவர்னர் எப்போது முடிவு எடுப்பார்? என்ன முடிவு எடுப்பார்? என்பதை அனைவரும் எதிர்பார்த்தனர். சசிகலா மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் கரத்தை பலப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கி உள்ள எம்.எல்..ஏக்களுடன் சசிகலா ஆலோசனைந் அடத்தினார். பின்னர் அ.தி.மு.கவின் புதிய சட்டமன்ற தலைவராக  எடப்பாடி பழனிசாமி தேர்வு செயப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்

இந்த தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எவ்வித தயக்கமும் இருக்காது என்பதை நான் இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நம் எதிரிகள், நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது ஆன்மாவும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவும் என்றும் மன்னிக்காது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தால், அது கழக ஒற்றுமைக்கும், புரட்சித் தலைவி அவர்களின் நல்லாட்சித் தொடர்வதற்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என அறிக்கையில் கூறி இருந்தார்.

தற்போது  ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் கூவத்தூரில் உள்ள எம்.எல் ஏக்களை சந்திக்க செல்ல உள்ளதாக மாபா பாண்டிய ராஜன் கூறினார். அங்குள்ள பல் எம்.எல்.ஏக்கள் தங்கள் அணிக்கு வர விரும்புவதாக பேசி வருகின்றனர். என கூறினார்.

இந்த நிலையில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஓ. பன்னீர்செல்வம் கூவத்தூர் செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.