அதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் என 250-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். தற்போதைய சூழலில் முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் ஆதரவாளர்கள் 21 பேர் தவிர, 113 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு தவிர 110 எம்எல்ஏக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 75 மட்டுமே நேற்று கூட்டத்துக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘எம்எல்ஏக்கள் சிலருக்கு தகவல் சரியாக செல்லவில்லை. அவர்கள் தற்போது வராததற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்’’ என்றனர்.

காத்திருந்த ஓபிஎஸ்

கூட்டம் 9.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் 9.15 முதல் 9.25-க்குள் வந்துவிட்டனர். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் கே.பழனிசாமி 10.03 மணிக்குதான் வந்தார். அதன் பின்னரே கூட்டம் நடந்தது. பழனிசாமிக்காக சுமார் 45 நிமிடம் ஓபிஎஸ் காத்திருந்தார்.

சசிகலாவை நீக்க எதிர்ப்பு

நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, சில அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தீர்மானங்களை கொண்டுவரும்போது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாகத்தான் இருந்தனர் ’’ என்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் கூறும்போது, ‘‘சசிகலாவை நீக்குவது பற்றி எந்தத் தீர்மானமும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் நானே எதிர்த்திருப்பேன். அப்படி ஒரு தீர்மானம் வராது. அதுபற்றி அறிவித்திருந்தால் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருப்பேன்’’ என்றார்.

அமைச்சர்கள் டெல்லி பயணம்

அணிகள் பிரிந்திருந்தபோது, சசிகலா நியமனம் குறித்தும், கட்சியில் யாருக்கு பலம் அதிகம் என்பதை நிரூபிக்கவும் இரு தரப்பிலும் தலா 3 லட்சத்துக்கும் அதிகமான பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது அணிகள் இணைந்துள்ள நிலையில், இந்தப் பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளனர்.

அத்துடன் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்து, ஒப்புதல் பெறவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக மைத்ரேயன் எம்பி., தலைமையில் முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து இன்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.