அதிமுக அணிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை; நேற்று இரவு 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை!

கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி, ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி அளித்தது முதல் அ.தி.மு.க. பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.

முடக்கி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்டெடுப்பதற்காக அ.தி.மு.க.வை ஒன்று இணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் (அ.தி.மு.க. அம்மா), ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் (அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா) இறங்கினர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்டது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியை விட்டு விலக்கப்பட்டனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு அது நின்றுபோனது.

இதற்கிடையில், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் அதிமுக அம்மா அணிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார். அதில், சசிகலாவின் புகைப்படங்களை அ.தி.மு.க. அலுவலகமான தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை வலுத்தது.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் வலியுறுத்தலை அடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது. இரு அணி இணைப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை என அ.தி.மு.க வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனைகளை ஏற்று சசிகலா பேனர் அகற்றப்பட்டுள்ளதால் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்பட்டது. இதுபற்றி மதுசூதனனிடம் கருத்து கேட்டபோது, நாங்கள் சொன்ன கோரிக்கையில் சி.பி.ஐ. விசாரணை கேட்டிருந்தோம். சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அ.தி.மு.க. கட்சி தொண் டர்களின் எண்ணம், சசிகலா குடும்பம் நமக்கு வேண்டாம் என்பதுதான். எனவே அதுவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

இன்று பேச்சுவார்த்தை

இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகள் இடையே இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்குகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் 7 பேர் கொண்ட குழுவானது கலந்துக் கொள்கிறது. இதற்கிடையே நேற்று இரவு இருதரப்பு இடையே ரகசிய பேச்சுவார்த்தை 5 மணி நேரங்கள் நடந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.