அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓபிஎஸ் பாஜகவில் சேருவதே நல்லது: நாஞ்சில் சம்பத் கருத்து

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் சேர்ந்து விடுவதே நல்லது என நாஞ்சில் சம்பத் பேசினார்.
டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மதுரை மாவட்டத்தில் அதிமுகவில் ஒரு பிரிவினர் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மதுரை சுப்பிர மணியபுரத்தில் நேற்று இரவு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி செல்ல பெரும் பங்கு வகித்தவர் சசி கலா. ஆனால், ஆட்சியிலோ, கட்சியிலோ பதவிகளுக்கு வர அவர் ஆர்வம் காட்டவில்லை. ஓ. பன்னீர்செல்வம் அரசியலுக்கு வர வாசல் அமைத்துக் கொடுத்தவர் சசிகலா. ஆனால், இன்று ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும், அதிமுக வையும் அழிக்கப் பார்க்கிறார். அதிமுக தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்.
ஜெயலலிதா இறந்தபின், சசிகலாவுக்கு முதல்வராகவும், கட்சி பொதுச்செயலாளராகவும் எண்ணம் இல்லை. ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், மதுசூதனன் போன்றவர்கள்தான் அவரை பொதுச்செயலாளராக, முதல்வராக வலியுறுத்தினர். அப்போது டெல்லியில் பாஜக சொன்னதால் திடீரென சசி கலாவை முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக்கும் முடிவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பின் வாங்கி னார். அதனால், திடீரென போய் ஜெயலலிதாவின் சமாதி முன் தியானம் செய்தார்.
ஜெய லலிதாவின் ஆன்மா பேசுவதாக நாடகமாடி கட்சியை அழிக்க எதிர்க்கட்சிகளுக்கு துணை போகிறார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு காலில் விழுவது சுகம். முன்பு ஜெயலலிதா காலில் விழுந்தார். அதன்பின் சசிகலா காலில் விழுந் தார். காலில் விழுந்து காரியம் சாதிப்பதில் அவர் பெரிய ஆள். இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் தினகரனை கைது செய்துள்ளனர். எந்தவொரு வழக்கிலும் லஞ்சம் வாங்கியவர்களைத்தான் போலீஸார் கைது செய்வர்.
ஆனால், டெல்லி போலீஸார் முதன் முறையாக லஞ்சம் கொடுத்ததாக தினகரனை கைது செய்து திட்டமிட்ட சதி. அவருக்கு ஜாமீன் வழங்காமல் மனு விசாரணையை தள்ளி வைக்கிறார்கள்.
ஓ.பி.எஸ். அதிமுகவில் இருந்து கொண்டு குழப்பம் விளைவிப்பதை விட பா.ஜ.க.வில் சேருவதே நல்லது என்றார்.