அணி தாவல் மீண்டும் தொடங்கியது: தினகரனை சந்தித்துவேலூர் எம்.பி. வாழ்த்து – அரசியல் களத்தில் பரபரப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை, முதல்வர் பழனிசாமி அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன் நேற்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் அணி தாவல் தொடங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.

சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி அணியும், டிடிவி.தினகரன் அணியும் தனித்தனியாக செயல்பட்டன. அதையடுத்து முதல்வர் அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்தன. இந்த காலகட்டத்தில் அதிமுகவின் சில எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் அணி மாறினர்.

தொடக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அங்கிருந்து தினகரன் அணிக்கு மாறினார். இ.பி.எஸ். அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்த பிறகு அந்த அணிக்குச் சென்றார். அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சிலர் அணி தாவும்போது தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், “எங்கள் அணிக்கு அதிமுக கட்சியும், சின்னமும் கிடைத்த பிறகு பிரிந்து சென்றவர்கள் வந்துவிடுவார்கள்” என்று சொல்லி வந்தார்.

3-வது முறையாக

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி தினகரன் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். இதையடுத்து நேற்று மாலை அவரது வீட்டுக்கு செங்குட்டுவன் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இதன்மூலம் செங்குட்டுவன் 3-வது முறையாக அணி மாறியிருக்கிறார். அணி தாவல் தொடங்கியுள்ளதால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.