அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இளம் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளையாட வேண்டுமானால் பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என முஹமது அக்ரம் சைபி கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக, ஒரு இந்தி சேனல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்குள்ள முஹமது அக்ரம் சைபி உள்நோக்கத்துடன் ராகுல் சர்மாவிடம் கேட்கிறார். மாநில அணியில் விளையாட விருப்பம் என்றால் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பெண்களை அனுப்பு என கேட்கிறார்.

மற்றொரு ஆடியோவில் சில போட்டிகளுக்குப் பிறகு மாநில அணியில் ராகுல் சர்மா இடம் பெறுவார் என்று உறுதியளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆடியோ பெரும் சர்ச்சைப் புயலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்துள்ள முஹமது அக்ரம் சைபி, தன் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ளார். முஹமது அக்ரம் சைபி கூறுகையில், “எனக்கு பெண்ணை அனுப்பியதாக அந்த பையன் சொல்கிறான். அவனுடைய குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தால் அவன் கிரிக்கெட் விளையாடியிருக்கனும். இதுதானே சரி?. அவர் விளையாடினானா? இல்லை. அவன் விளையாடியிருந்தால் குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருக்கும்.

60 பேர் கொண்ட உத்தர பிரதேச அணிக்கான பட்டியலில் அவனது பெயர் இல்லை. அவன் இதுவரை எந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “விரைவில் உண்மை வெளிவரும். நான் ராஜீவ் சுக்லா போன்ற பெரிய மனிதர்களுடன் வேலை செய்கிறேன். அதனால், எல்லா மூலைகளிலிருந்தும் என் மீது பலர் தாக்குதல் நடத்துவது இயல்பு. இது எனக்கு நெருக்கமானவர்கள் உள்பட அதிருப்தியடைந்தவர்களால் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இன்னும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவின் தனிப்பட்ட ஊழியர்களில் ஒருவர், உத்திர பிரதேச அணியில் வீரர்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்குப் பிறகு ஒரு விசாரணைக்கு பின்னர் அவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டார்.