அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் ஒரு லட்சம் வீடுகள் சிறப்பு திட்டம்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

அடையாறு, கூவம் கரையோரங் களில் வசிக்கும் 2 லட்சம் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி யில் ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் கே.பழனிசாமி தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான மனுவை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் வழங்கினார். அது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வேண்டு கோளும்விடுத்தார்.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் கே.பழனிசாமி பேசியதா வது:
தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப் பட்டுள்ளதால், விரைவில் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்கப்படும். தற்போதைய ஸ்மார்ட் சிட்டி வரையறைக்குள் நகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர் மாநகராட் சிகள் தவிர, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி களையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் இணைக்க அனுமதிக்க வேண் டும். தமிழகத்தில் உள்ள பேரூ ராட்சிகள், நகராட்சிகளின் உட்கட் டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனியாக ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் ஏற்கெனவே 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 ஆயிரத்து 312 கோடியில் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் திட்டத்தை செயல் படுத்த ஜப்பானின் ஜைகா நிதியை பெற்றுத்தர வேண்டும். அடை யாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்டவற்றின் கரையோரம் வசித்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் திட்டத்துக்கு அனுமதியளிப்பது டன், ரூ.5 ஆயிரம் கோடி நிதியும் தர வேண்டும்.
சென்னையில் நீர் நிலைகளின் அருகில் 2 லட்சம் மக்கள் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். சென்னை மெரினா கடற்கரை பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு அப்பகுதியிலேயே வீடுகள் கட்டித்தரும் திட்டத்துக்கு கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை தளர்த்த வேண்டும். சென்னை பெருநகர பகுதியில், 60 சதுர மீட்டர் வரை உள்ள வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் மேலும் 10 மாவட்ட தலைநகரங்களில் எப்.எம்.சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் மண்டல மையம் அமைக்க வேண்டும். அதேபோல் ஏதேனும் ஒரு பல் கலைக்கழகத்துடன் இணைந்து புனேயில் உள்ள மத்திய திரைப் படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மண்டல மையத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.