அசாம்: கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து இடைநீக்கம்…

அசாம் மாநிலத்தின் டரங் மாவட்டம் சிபஜ்கர் பகுதியில் கடந்த 23-ம் தேதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்துவந்த மக்களை போலீசார் அகற்ற முயற்சித்தபோது வன்முறை வெடித்தது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருந்த மக்களுக்கும் போலீசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காளதேசத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று 1979 முதல் 1985 வரை போராட்டங்கள் நடைபெற்றது.
அதில், 1983-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 8 பேரை சிபஜ்கர் பகுதியில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் கொலை செய்ததாக ஆளும் பாஜக அரசில் இடம்பெற்றுள்ள சில கூட்டணி கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் கூறினர். ஆனால், 1983-ல் கொல்லப்பட்ட 8 பேரும் தியாகிகள் அல்ல… அவர்கள் கொலைகாரர்கள் என்று அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷர்மன் அலி அகமது கூறினார்.
சிபஜ்ஹர் பகுதியில் வசித்து வந்த சிறுபான்மையினர் மீது அந்த 8 பேரும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமாக அப்பகுதியில் வசித்துவந்த இஸ்லாமிய மக்கள் அந்த 8 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர்’ என்றார்.
எம்.எல்.ஏ. ஷர்மன் அலி அகமதுவின் பேச்சு அசாமில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஷர்மன் அலி அகமது கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷர்மன் அலியை 2 நாட்கள் காவலில் அடைக்க கும்ரப் மாவட்ட நீதித்துறை மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, எம்.எல்.ஏ. ஷர்மன் அலி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில்,  சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கைதாகி சிறையில் உள்ள எம்.எல்.ஏ. ஷர்மன் அலி அகமது காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நெறிமுறைகளுக்கு மாறாக அலி அகமது தொடர்ச்சியாக செயல்பட்டு வந்ததால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அசாம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று அறிவித்துள்ளார்.