ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

அடாவடிக்கு பெயர் போன நாடாக சீனா மாறி வருகிறது. ஒற்றை கட்சி ஆட்சி என்பதாலோ என்னவோ, உலகத்துக்கே தான் வைத்தது தான் சட்டம் என்ற நினைப்பு, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வந்து விட்டது போலும்.
பதிவு: ஜனவரி 05, 2022 08:38 AM
ஒரு பக்கம் தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம், இந்தியாவுடன் சீனாவுக்கு நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிற சூழலில் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கிறது.

கல்வான் தாக்குதல்

இதற்கிடையேதான் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படைகளுடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கில் சீன துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

அதே ஆண்டின் ஜூன் மாதம் 15-ந்தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், திடீரென சீன படையினர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து, இந்திய படை வீரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஆனால் அந்த நிலையிலும், தாய் மண்ணை காக்க வேண்டும் என்ற தவிப்பில், சீன துருப்புகளை இந்திய ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் எதிர்த்து நின்று பதிலடி கொடுத்தனர். இதில் சீனப்படையினர் 45 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. முதலில் தன் தரப்பு உயிர்ச்சேதத்தை ஒப்புக்கொள்ளாத சீனா, கடைசியில் படைவீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டது.

இந்த மோதலுக்குப்பின்னர்தான் எல்லையில் பதற்றம் தணிக்கவும், அமைதியை பராமரிக்கவும் இரு தரப்பு பேச்சுவார்த்தை மறுபடியும் நடந்து வருகிறது.

பெயர் சூட்டி அடாவடி

இதற்கு மத்தியில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத் என்றுசொல்லி சொந்தம் கொண்டாடி வருவதை புதுப்பிப்பது போல சீனா நடந்து கொண்டது.

அந்த பகுதிகளுக்கு பெயர் சூட்டி அடாவடி செய்தது.

பாலம் கட்டும் சீனா

இப்போது சீனாவின் மற்றொரு அடாவடிச்செயல், செயற்கைக்கோள் படம் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த செயற்கைக்கோள் படத்தில் கிழக்கு லடாக்கில் பாங்காங் சோ ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் கட்டுமானம் தெரிகிறது. இதுதான் பாலம்.

கிழக்கு லடாக்கில் பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கிற வகையில் சீனா இந்த பாலத்தை கட்டி வருகிறது. இது சரியாக கிழக்கு லடாக்கில் எல்.ஏ.சி. என்று சொல்லப்படுகிற அசல் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 25 கி.மீ. முன்பாக அமைவ தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாலம் கட்டும் பணி சில காலமாகவே நடந்து வந்துள்ளதாம்.

சீனாவுக்கு என்ன ஆதாயம்?

வடக்கு கரை பகுதியில் குர்னாக் கோட்டையில் சீனப்படையின் பாதுகாப்பு அரண் உள்ளது. தெற்கு கரையில் மோல்டோ என்ற இடம் உள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே 200 கி.மீ. தொலைவு உள்ளது. சீனா கட்டுகிற பாலம் வடக்கு, தெற்கு கரைகளுக்கு இடையே 500 மீட்டர் தொலைவுக்கு அமைகிறது.

இந்தப்பாலத்தால் சீனாவுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழும். ஆதாயம் இருக்கிறது.

இந்த பாலத்தால் பாங்காங் சோ ஏரியின் இரு பகுதிகளுக்கும் இடையேயான தொலைவை கடக்க ஆகிற நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 3 அல்லது 4 மணி நேரம்தான் ஆகும்.

தற்போது வரை சீனப்படையினர் ரூடோக் கவுண்டியை கடந்து ஒரு ரவுண்டானாவை சுற்றித்தான் வர முடியும். ஆனால் இனி சீனப்படை நேரடியாக வந்து விடலாம்.

இந்த பாலம் சீனப்படையினர் பயண நேரத்தை வெகுவாக குறைத்து விடும்.

இந்தியாவுக்கு என்ன பிரச்சினை?

இந்த பாலம் சீனப்பகுதியில்தான் கட்டப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதில் இந்தியாவுக்கு ஒரு சிக்கல். இதற்கு ஏற்ற வகையில் தனது செயல்பாட்டு திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்தியாவும் அதிரடி வியூகம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.