மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.
சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியிலான வன்முறை வெடித்தது.
குறிப்பாக, பாஜக கட்சி, திரிணாமுல் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் கொலை, கூட்டுபாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை தொடந்து விசாரணையை தொடங்கிய சிபிஐ மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை சிபிஐ கொல்கத்தா ஐக்கோர்ட்டில் சீல் இடப்பட்ட கவரில் அறிக்கையாக இன்று தாக்கல் செய்துள்ளது. அதேபோல், இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணையின் தற்போதைய நிலையை சீல் இடப்பட்ட கவரில் அறிக்கையாக ஐகோர்ட்டில்  தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் என கொல்கத்தா ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.