இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக பலன் தரும்- சவுமியா சுவாமிநாதன்

இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடம் அல்லது அதற்கும் அதிகமாக எதிர்ப்பு சக்தி தரும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறி உள்ளார்.
புதுடெல்லி
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவைத் தாக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
 உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள்  அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. பல காரணங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  ஆனால் இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை. பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடியவர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் தடுப்பூசி போடாதவர்கள் ஆவார்கள்.
இரண்டு தடுப்பூசிகள் குறைந்தது ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் அதிகமாக எதிர்ப்பு சக்தி தர போதுமானதாக இருக்கும். இரத்தத்தில் ஆன்டிபாடிகளின் அளவு குறையத் தொடங்கினாலும், தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிக்கும்.
ஆரோக்கியமான பெரியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி போடுவது நல்லது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பாதுகாப்பு, ஒருவேளை, இன்னும் அது அதிகமாக  கூட இருக்கலாம் என கூறினார்.
பூஸ்டர் ஊசி போடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சவுமியா சுவாமி நாதன் இது குறித்த  இறுதி முடிவுக்கு வர கூடுதல் தரவுகள் தேவை. தரவைப் பார்க்காமல் நாம் முடிவுகளுக்கு வர முடியாது  என கூறினார்.