பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை தகவல்

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி 30 ஆண்டு காலம் நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தம், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போருடன் முடிவுக்கு வந்தது.

ஆனாலும் இறுதிகட்ட போரில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை தொடர்பாக சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து இலங்கை சந்தித்துவருகிறது. குறிப்பாக 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அடிப்படையில், அந்நாட்டுக்கான ஏற்றுமதி சலுகை ரத்து செய்யப்படும் என்று
எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வர்த்தகச் சலுகையால், ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையால் வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட இச்சலுகை, 2017-ல் மீண்டும் வழங்கப்பட்டது. ஆனால் மனித உரிமை மீறல்கள், நல்லிணக்கச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால், வரிச் சலுகையை தற்காலிகமாக ரத்து செய்யப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது இலங்கையின் ஆடை உற்பத்தி, மீன்பிடி தொழிலுக்கு பலத்த அடியாக அமையும். சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனை.

இந்நிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நல்லிணக்கச் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து மறுஆய்வு செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், அந்த சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் 16 பேருக்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மன்னிப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.