தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை – புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர் திலகராணி(45). இவருக்கு, 5 மகன்கள் உள்ளனர். மது அருந்தி கொடுமை செய்த கணவனை 2006ம் ஆண்டு திலகராணி கொலை செய்தார். அப்போது, ஐந்தாவது மகன் முத்து, நான்கு மாத கருவாக வயிற்றில் இருந்தான். இதில் திலகராணி, நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, விடுதலையானார். தாய் சிறை சென்றது முதல் தாத்தா வீட்டில் மற்ற 4 மகன்களும் வசித்து வந்தனர்.
தந்தையை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்று வந்ததால் தாயுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தனர். திலகராணியுடன், சிறையில் இருந்த போது, பிறந்த 5வது மகன் முத்து மட்டும் இருந்தான். அப்பகுதியில் உள்ள கணவனுக்கு சொந்தமான வீட்டில், திலகராணி வசித்து வந்தார். அந்த வீடு மற்றும் சொத்துகளை பிரித்து தருமாறு மற்ற 4 மகன்களும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கு தாய் திலகராணி தர முடியாது என மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டைக்கு செல்ல தனது 5வது மகன் முத்துவுடன், திலகராணி மறவன்பட்டி  பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது மூத்த மகன் ஆனந்த் (26) சொத்து பிரித்து கொடுக்காத ஆத்திரத்தில், தாய் திலகராணியின் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் தலையை அரிவாளால் துண்டித்து கொலை செய்தார். பின் தலையுடன் கறம்பக்குடி போலீசில் சரண் அடைந்தார். அவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக வழக்கு புதுக்கோட்டை மகளிர்  கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து  கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.