தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைத்த பின் விற்பனை அதிகரிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 4 ம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சராசரியாக ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டர் விற்பனையானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சராசரியாக ஒரு நாள் பெட்ரோல் விற்பனை 10,317 கிலோ லிட்டர் விற்பனையாகியுள்ளது. பெட்ரோல் விலைகுறைப்பால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளார்கள்.

பெட்ரோல் விலை ரூ.3 குறைப்புக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததனால் 12 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி ஒன்றிய அரசிற்கு கிடைக்கும். இதற்கு பிரதமரும், மத்திய பெட்ரோலியத் துறை மந்திரியும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் .

நிதி இல்லாத போது எவ்வளவு திறமை இருந்தாலும் சமாளிக்க முடியாது, சில செலவுகள் பண வீக்கத்திற்கு ஏற்ப அதுவாக அதிகரிக்கிறது என்ற அமைச்சர், “110 விதியின் அடிப்படையில் கடந்த பத்து வருடங்களில் எத்தனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது அதில் எத்தனை செயல்படுத்தப்பட்டது? அதற்கு நிதி எங்கிருந்து வந்தது ? எப்படி செலுத்தப்பட்டது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தி இந்த கூட்டத்தொடரிலேயே அவை முன் அறிக்கை வைக்கப்படும். இதேபோல பல துறைகளில் ஆய்வு செய்ய உள்ளோம். இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை” என்று தெரிவித்தார்.