ரதசப்தமி 19.02.2021 – தாத்பர்யம்

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.

அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார்.

செயல்படாத தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால் தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அவரை விட்டு அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது.

இருந்தாலும் அநீதியை எதிர்க்காத உன் கண்கள், காதுகள், வாய், தோள்கள், கைகள், கால்கள் அனைத்திற்கும் மேலாக தர்மத்தை சிந்தனை செய்யாத உன் தலை என அங்கங்கள் அனைத்தும் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றார்.

அதற்கு பீஷ்மர் என் அங்கங்களை பொசுக்க சாதாரண அக்னி போதாது சூரிய பகவானின் வெப்பத்தை பிழித்து என் அங்கங்களை பொசுக்க உதவுங்கள் என்றார். அப்போது தான் என் பாவம் தொலையும் என்று வேண்டினார்.

உடனே வேத வியாசர் சூரியனின் முழு சக்தியும் உள்ள எருக்கன் இலைகளால் பீஷ்மரின் அங்கங்களை மூடினார்.

இந்த எருக்கன் இலைகள் சூரிய சக்தியை உன் உடலில் பாய்ச்சும், நீ புனிதம் அடைவாய் என்றார். பின் பீஷ்மர் தியானத்தில் அமர்ந்து அந்நிலையிலேயே முக்தி அடைந்தார்.

அந்தப் புனித நாளே ரதசப்தமி !! பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே அவருக்கு யார் பித்ரு கடன் செய்வது என்று தருமர் வருந்தினார்.

அதற்கு வியாசர், ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும் பரிபூர்ண தூய்மை உள்ள துறவிக்கும் நீத்தார் கடன் என்பது அவசியமே இல்லை, அவர்கள் நற்கதியையே அடைவார்கள் என்று கூறினார்.

வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர் கடன் அளிக்கும் என்றும் கூறினார்.

ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்து நீராடுபவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், பீஷ்மருக்கு நீர் கடன் அளித்ததால் புண்ணியமும் அடைவர் என்று கூறினார்.

எனவே ரத சப்தமி அன்று விரதம் மேகொண்டு 7 எருக்கன் இலைகளை அட்சதை சேர்த்து தலை, கண்கள், தோள்பட்டைகள், கால்களில் வைத்துக் கொண்டு நீராடினால் பாவத்தில் இருந்து விடுபடலாம். அன்று சூரிய பகவானுக்கும் பீஷ்மருக்கும் தூய்மையான நீரினை உள்ளங்கையில் ஏந்தி அர்க்க்யம் சமர்ப்பிக்க வேண்டும்.