Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

கெரில்லாயிசத்தின் இருப்புநிலை கணக்கு

குவாராயிச-காஸ்ட்ரோயிச இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் புதிய கருவிகளாக பப்லோவாதிகள் பிரகடனம் செய்தவையாக ஆயின. அவர்களின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்க இந்த இயக்கங்களின் வர்க்கப் பண்பினை அவற்றின் தோற்றத்திலிருந்து திரைநீக்கிப் பார்க்கவேண்டும்.

வெனிசுலாவின் FALN இயக்கம் 1960களில் கியூப ஆதரவோடு அமைக்கப்பட்ட கெரில்லா இயக்கங்களுள் ஒன்றாகும். அந்த காலகட்டத்தின் இத்தகைய இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரது கருத்தினை மேற்கோள்காட்டுவோம்.

“நாம் வெனிசுலாவின் விடுதலைபற்றி பேசுகின்றபோது, நாம் அனைத்து இலத்தின் அமெரிக்காவின் விடுதலையையே அர்த்தப்படுத்துகிறோம். நம் அண்டை அயலில் உள்ளவர்கள் தத்துவரீதியாக முன்னணியில் உள்ளவர்கள். நாம் சர்வதேச ஐக்கியத்தை உண்மையான புரட்சிகர வழியில் செயல் உருப்படுத்திக்காட்டுவோம், ஆதலால் நாம் போராடக் கடமைப்பட்டுள்ளோம், ஏகாதிபத்தியத்தை துடைத்து ஒழிக்கும் வரை போராடுவோம். குறிப்பாக வட அமெரிக்க ஏகாதிபத்தியம் செயலிழந்து போகுமளவுக்கு குறைக்கப்படும்வரை எமது ஆயுதங்களைக் கீழே போடாதிருக்க கடமைப்பட்டுள்ளோம்”.

இவ்வரிகளுக்கு உரியவர் தியோதோரோ பெட்காப் (Teodoro Petkoff) என்பவர். அவர் தனது ஆயுதங்களை மட்டும் கீழே போடவில்லை, வெனிசுலாவின் திட்டம் மற்றும் பன்னாட்டு நாணயநிதியத்தின் கெடுபிடி வேலைத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான பொறுப்பின் முதன்மை அலுவலராகவும் ஆகியிருந்தார். கண்டரீதியான ஐக்கியம் மற்றும் யாங்கி ஏகாதிபத்தியத்தின் முடிவு வரை போராடுவதிலிருந்து, பெட்கோப் இப்போது நாடு கடந்த முதலீட்டிற்காக இந்தப் பிராந்தியத்தின் ஏனைய முதலாளித்துவ பொருளாதாரத்துடன் வெற்றிகரமாய் போட்டியிடுவதை இலக்காகக்கொண்டு, நிறுவனங்களை தனியார்மயமாக்கல் மற்றும் கூலிகளை குறைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டார். வெனிசுலாவில் இந்த ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரதான வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.

அவரது அம்சம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. உருகுவேயில் தலைநகர் மாண்டிவிடியோவில் என்றும் இல்லாத அளவுக்கு சமூக நிலைமைகள் சிதறடித்துள்ளதை நிர்வகிக்கின்ற முதலாளித்துவ தேர்தல் முன்னணியான பிரண்டி அம்பிலியோவின் பகுதியை இப்போது துபாமாரோ கெரில்லாக்கள் அமைத்திருக்கின்றனர். M-19 கொலம்பிய அரசாங்கத்துடன் செய்துள்ள ஏற்பாடானது, அவர்களது தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் பதவிகளை உறுதிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் உறுப்பினர்களை சிறிய வர்த்தகக் கடன்களுக்காக தங்களின் ஆயுதங்களை வியாபாரம் செய்ய அனுமதித்துள்ளது.

1980களில் காஸ்ட்ரோ அரசும் அதனது ஆதரவாளர்களும், நிக்கராகுவா சாண்டினிஸ்டாக்களால் அதிகாரம் கைப்பற்றப்பட்டதுடனும் எல்சால்வடோரில் உள்நாட்டு யுத்த வெடிப்புடனும், மத்திய அமெரிக்கா தங்களின் முன்நோக்கின் புதிய நிரூபணத்தை வழங்கியதாகப் பிரகடனப்படுத்தினர்.

ஆனால் இவ்வியக்கங்கள் எல்லாம் என்னவாயின. எல்சால்வடோரில் FMLN, குவாதிமாலாவில் URNG, சாண்டினிஸ்டாக்கள் ஆகிய அனைவரும், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் படுகொலைக்கு காரணமாயிருந்த சக்திகளிடம் உடன்படிக்கைகளில் இணைந்தனர். காண்டாடோரா மற்றும் எஸ்கிபுலஸ் பேச்சு வார்த்தைகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் அமெரிக்க ஆதரவு அணிகளின் கைகளில் அரசு அதிகாரத்தை நிலைப்படுத்தும், அதேவேளை விடுதலை இயக்கங்கள் என்று அழைக்கப்படுகின்றவற்றின் காரியாளர்களை இந்த அரசாங்கங்களில் பாராளுமன்ற பொறுப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களாக திரும்பவைக்கின்ற இந்த உடன்படிக்கைகளில் காஸ்ட்ரோ ஒரு தரகராக இருந்து உதவிசெய்தார். இவ்வனைத்துக் குழுக்களும் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு அரசியல் காட்டிக்கொடுப்பு மற்றும் நிதி ஊழல்களுக்காக தங்களை நியாயப்படுத்தி, ஒருவரை ஒருவர் கண்டனம் செய்துகொண்டிருந்தனர்.

இதற்கிடையில், இப்பிராந்திய மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பிராந்தியத்தில் புரட்சிகர எழுச்சிகளுக்கு வித்திட்டவற்றைவிட மோசமான அல்லது அதுபோன்ற ஒடுக்குமுறை மற்றும் ஏழ்மையின் சூழல்களுடன் மோதலுக்கு வந்தனர். மிகவும் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில் செயலிழப்பை விதைத்து இருந்ததுதான் இந்த காஸ்ட்ரோயிஸ்டுகளின் செல்வாக்குடைய குட்டி முதலாளித்துவ, தேசியவாத இயக்கங்களின் மொத்தபாதிப்பாகும்.

இன்றைய கியூபா

கியூபா என்னவாக இருக்கிறது? முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காஸ்ட்ரோ ஆட்சியும் பப்லோவாத திருத்தல்வாதிகளும் பிரகடனம் செய்த சோசலிசத்துக்கு புதிய பாதையின் இறுதி விளைவு என்ன?

முப்பதாண்டுகளாக தீர்வானது மாஸ்கோ அதிகாரத்துவத்திடமிருந்து பெரும் மானிய உதவிபெற்று தப்பி இருந்ததற்கு நன்றி உடையதாக இருக்கவேண்டும். அமெரிக்க மதிப்பீட்டின் படியும் காஸ்ட்ரோ ஆதரவாளர்களின்படியும் சோவியத் ஒன்றியத்திடமிருந்து கியூபாவுக்கு கிடைத்த பொருளாதார மானியங்கள் ஏறத்தாழ ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர்களுக்கும் 5 மில்லியன் டாலர்களுக்கும் இடையிலானதாக இருந்தது. இந்த உதவிக்கான செய்முறை சோவியத் அணிநாடுகள் கியூப விவசாய உற்பத்திப்பொருட்களை குறிப்பாக சர்க்கரை போன்றவற்றை உலக சந்தை விலைக்கும் மேலாக பன்னிரண்டு மடங்கு அதிகமான விலைக்கு வாங்குவதும் பெட்ரோலியத்தை சந்தைவிலைக்கும் கீழ் விற்பனை செய்வதும் ஆகும். கியூபா கைமேல் பணத்திற்காக சர்க்கரையை பக்கத்து நாடான டொமினிக்கன் குடியரசிலிருந்து வாங்குகின்ற நிலையையும், எண்ணெயை சந்தைவிலைக்கு மறு விற்பனை செய்கின்ற நிலையையும் அடைந்தது.

சோவியத் மானியங்களைச் சார்ந்திருத்தல் இறுதியில் சர்க்கரையில் கியூபாவின் தனித்த கலாச்சாரத்தை கெட்டிப்படுத்தும் விளைவை ஏற்படுத்தியது. சர்க்கரையில் இத்தனிக் கலாச்சாரம் வரலாற்று ரீதியாக அதன் பின்தங்கிய நிலைக்கும் ஒடுக்குமுறைக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. 1959 புரட்சிக்கு சற்று முன்னர், கியூபாவின் ஏற்றுமதிகளில் 83% சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. அதில் சர்க்கரை, புகையிலை, நிக்கல், மீன் மற்றும் ஒருசில விவசாய பண்டங்களும் அடங்குவன. சோவியத் அணியிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வுப்பொருட்கள் மற்றும் எந்திரங்களை கியூபா இறக்குமதி செய்தது. அதன் பெரும்பாலான பங்கு உணவை இங்கு குறிப்பிடத் தேவையில்லை.

வீழ்த்தமுடியா “உயர்தலைவர்” பிடல் காஸ்ட்ரோவால் ஆணையிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையில், தீடீர் தீடீரென்று கொண்டுவரப்பட்டவையோ அல்லது செய்த ஒட்டு வேலைகளோ இந்த அடிப்படை உறவினை மாற்றவில்லை. முடிவில் கியூப மக்களால் சுகாதாரம், கல்வி மற்றும் சத்துணவு ஆகியவை தொடர்பாக வென்றெடுக்கப்பட்ட கணிசமான சீர்திருத்தங்கள் இந்த மானியங்களால் தக்கவைக்கப்பட்டிருந்தன. இப்போது ஆட்சியானது நேரடி அந்நிய முதலீட்டின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் படிப்படியாக சிறிது சிறிதாக வெட்டிக் குறைக்கப்பட்டுவருகின்றன.

காஸ்ட்ரோ சோவியத் அதிகாரத்துவத்துடன் பாஸ்டின் பேரத்தில் இறங்கினார். அதில் அவர் அமெரிக்க சோவியத் உறவுகளில் சோவியத் மானியங்கள் பெறுவதற்கு பகடைக்காயாக தொழிற்பட்டார். தவிர்க்க முடியாதவாறு சாத்தான் தனது கணக்கைக் காட்டத் துவங்கியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது கியூபாவுக்கான பொருளாதார பேரழிவை உருவாக்கியது. கியூபா அரசின் பதிலானது, அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஊக்கப்படுத்துவதாகவும் கியூபாவுக்குள்ளேயே அடுக்கடுக்கான சமூகத்தட்டுக்களின் வளர்ச்சியைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்தது. அரசு நடத்துகின்ற செய்தித்தாளான கிராண்மாவிடம் பேட்டி அளிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ரோபர்டோ ரோபெய்னா விவரித்ததாவது: “கியூபாவில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது என்னவெனில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான முழு உத்தரவாதத்துடன் கூடிய பொருளாதாரத் திட்டமிடல், இந்தத் திறந்துவிடல் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒவ்வொரு நாளும் அகலமாகவும் ஆழமாகவும் ஆகிவருகிறது.

“மிட்சுபிஷி மோட்டார்ஸ், கேஸ்ட்ரால், யூனிலீவர், ஷெரிட்கோர்டன், க்ருபோசோல், டோடல், மீலியா ஹோட்டல்கள் டோமோஸ், கெணான், பேயர் (Mitsubishi Motors, Castrol, Unilever, Sherrit Gordon, Grupo Sol, Total, Melia Hotels, Domos, ING Bank, Rolex, DHL, Lloyds, Canon, Bayer) இவை வர்த்தக உலகில் வெற்றிகள் பெற்ற பெயர்கள், இவை கியூபாவில் உள்ளன. இந்நிறுவனங்களில் சில உலகில் பெரும் மூலதனத்தைக் கொண்டிருக்கின்றன. அவை நம்மில் தங்களது நம்பிக்கையை வைத்துள்ளன.

“முதலீடு செய்தலை இலகுவாக்கல், பாதுகாப்பு, மரியாதை இலாபம் திரும்பக்கிடைக்க உத்தரவாதம், உயர்மட்ட தனிச்சிறப்புடன் கூடிய ஆட்களின் இருப்பு, இடவசதி, முன்னேறவிருப்பம், பேச்சுவார்த்தைகளில் அக்கறை மற்றும் அவர்களின் கியூப பங்குதாரர்களின் விசுவாசம் ஆகியன, கியூபாவுடன் இணைவதற்கு முடிவுசெய்த சக்திகளுக்கு மிக விருப்பமான அம்சங்களுள் சிலவாகும்.

அவர்கள் கிராண்மாவில் தங்கவில்லையாயினும், அவர்கள் கியூபாவில் இப்பூகோளத்தின் மலிவான உழைப்பை பெறமுடியும் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் பயிற்றுவிக்கப்பட்ட போலீஸ் அரசினால் வேலை நிறுத்தமில்லா சூழ்நிலைக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று இந்த முதலீட்டாளர்களுக்கு ஐயத்திற்கிடமின்றி தனியாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும் அரசு நடத்தும் நிறுவனங்களை தனியார் மயமாக்கல், இலத்தின் அமெரிக்காவின் பெரும்பகுதியில் உள்ளதைக்காட்டிலும், கியூபாவில் தனியார்மயமாக்கல் மிகவும் எளிமையானதாகும். பிரேசில், ஆர்ஜண்டினா மற்றும் ஏனைய நாடுகளில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றங்களால் புதிய சட்டங்களை நிறைவேற்றலும், நீண்ட விவாதங்கள் இடம் பெறலுடன் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புகளும் தேவைப்படும். கியூபாவில் தேவைப்படுவதெல்லாம் பிடல் காஸ்ட்ரோவிடமிருந்து ஒரு வார்த்தையும் அதனை அவரது அமைச்சரவை விரைந்து அங்கீகரிப்பதுமேயாகும்.

காஸ்ட்ரோ அரசாங்கம் வழக்கமான பாணியில் கியூபப் புரட்சியின் “சமூக வெற்றிகளை” காப்பாற்றும் நோக்கத்திற்காக வெளிநாட்டு முதலாளிகளின் முதலீடு வரவேற்கப்படுகிறது என்று கூறுகிறது. யதார்த்தம் என்னவெனில், முன்னைய காலனித்துவ உலக முழுவதும் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளைப் போலவே காஸ்ட்ரோவின் ஆட்சியும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மலிவான உழைப்பை சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தது.

கியூபாவின் விஷயத்தில் இது தீவிரமாக நேரடியாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட வடிவிலும் செய்யப்படுகிறது. கியூப அரசாங்கத்திற்கு கைமேல் உடனடி காசு கிடைப்பதற்காக வெளிநாட்டு கார்ப்பொரேஷன்களுக்கு கியூப உழைப்பு ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. அரசாங்கம் தேவையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, இந்தத் தொகையில் சில பகுதியை வட்டார நாணயமான பெசோக்களில் செலுத்துகிறது. வெளிநாட்டுக் கம்பெனிகள் தொழிலாளர்களை இஷ்டம் போல் வேலையை விட்டு நீக்குவதில் முழு உரிமையைத் தக்கவைத்திருக்கின்றன.

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி முதலாளித்துவ டாலர் பொருளாதாரத்தால் பேணப்பட்டு வருகிறது. இன்று அந்நியச் செலாவணி கையிருப்பில் பெருமளவின் வளம், அமெரிக்காவில் பெருமளவில் தங்கியுள்ள புலம் பெயர்ந்தோர், கியூபாவிலுள்ள தங்களது உறவினர்களுக்கு அனுப்பப்படும் தொகையாக இருக்கிறது.

மற்றொரு கைமேல் உடனடிப்பணம் கிடைக்கும் வடிகால், சுற்றுலாத்துறை ஆகும். இதனை காஸ்ட்ரோ ஆட்சி தனது பொருளாதாரத் திட்டமிடலின் மைய அச்சாக வைத்திருக்கிறது. இதன் விளைவு கியூபா ஒருவகை சுற்றுலா நிற ஒதுக்கல் என்று கூறுமளவுக்கு ஆகிவிட்டது. புது விடுதிகள், சிற்றுண்டி உணவகங்கள், கடைகள் கட்டப்பட்டு வெளிநாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சாதாரண கியூபர்கள் அதற்கு தடைசெய்யப்பட்டுள்ளனர். விபச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வறுமை நிலைக்கும் கீழ் வாழ்கின்றனர்.

காஸ்ட்ரோ ஆட்சியானது தீவின் அனைத்து பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க தடையை காரணமாகக் குற்றம்சாட்டுகிறது. கேள்விக்கிடமில்லாமல் அமெரிக்காவின் கொள்கை சிறிய ஒடுக்கப்படும் நாட்டிற்கெதிரான ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனமான, பகுத்தறிவுக்கொவ்வாத நடவடிக்கைதான். ஆனால் இக்கொள்கை 35 ஆண்டுகளாக பாதித்து வந்துள்ளது. இதற்கிடையில் உண்மையில் கியூபா உலகிலுள்ள ஏனைய பெரிய நாடு ஒவ்வொன்றுடனும் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தது.

கியூபாவின் நெருக்கடி, அடிப்படையில் புரட்சிதன்னின் முதலாளித்துவ பண்பின் வெளிப்பாடாகும். கியூப சமுதாயத்தின் வரலாற்றுப் பிரச்சினைகள் எதனையும் தீர்ப்பதற்கு அது தவறியது. சோவியத் அதிகாரத்துவத்திலிருந்து பெருமளவில் பெற்ற மானியங்களால் முரண்பாடுகள் மூடி மறைக்கப்பட்டு வந்தன.

ஒரு சில நாடுகள் பெருமளவிலான அகதிகளின் வெளியேற்றத்தைக் கண்டிருக்கின்றன. புரட்சியின் முதலாவது ஆண்டுகளில் வெளியேறிய இவ்வகதிகள் பெரும்பாலோருள் முதலாளிகளும், நடுத்தர வர்க்கத்தின் சலுகைமிக்க தட்டினரும் அடங்குவர். ஆனால் 1980களிலும் 1990களிலும் கட்டுமரங்களிலும் காற்றடைக்கப்பட்ட சக்கர டியூப்களிலும் கியூபாவில் இருந்து வெளியேறியவர்கள், ஹைட்டி நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறக் காரணமாயிருந்த அதேபோன்ற சக்திகளினால்தான் வெளியேற நேர்ந்தது. அதாவது பசி மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பதாகும்.

இத்தகைய நிலைகளின் மேல் தங்கி உள்ள ஆட்சி பரந்த கியூப தொழிலாளர்களின் நாட்டங்களை நெரித்து மூச்சுத்திணற வைக்கின்றது. காஸ்ட்ரோ இராணுவ வழிகளின் ஊடாக அரசியல் சர்வாதிகாரத்தினை செய்கிறார். இந்த அரசின் அடிப்படை நிறுவனமான ஆயுதப்படைகள் கியூபாவின் பெரும்பாண்மையான பொருளாதார நிறுவனங்களை நடத்துகின்றன.

காஸ்ட்ரோ கியூப அமைப்பில் வாழ்நாள் தலைவராக போற்றிப்பேணப்படுகிறார். ஆதலால் அவரை எதிர்ப்பதென்பது வெறுமனே “எதிர்ப்புரட்சி” மட்டுமல்ல, அரசியல் சட்டத்துக்கு புறம்பானதுமாகும். அவர் அரசின் மற்றும் அரசாங்கத்தின் தலைவரும் அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரும் இராணுவத்தின் முதல் பெரும் படைத் தலைவருமாவார். சுருக்கமாக சொன்னால், அவரது கையில் அனைத்து அதிகாரமும் குவிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் கியூபாவில் ஒவ்வொரு முக்கியமான முடிவின் மேலும் அவரது தனிப்பட்ட அதிகாரத்தை அவர் திணிக்கிறார். எழுபது வயதிலிருக்கும் காஸ்ட்ரோவுக்கு பின்னால் வரக்கூடியவர் பற்றி வலிந்து ஏற்கவைக்கும் பிரச்சினை இருக்கிறது. அவரது சகோதரர் ராவுல் அரசாங்கத்தில், இராணுவத்தில் மற்றும் கட்சியில் அனைத்து துணைப் பதவிகளிலும் அங்கம் வகிக்கிறார்.

ஏகாதிபத்தியவாதிகள் ஒருபுறமும் காஸ்ட்ரோ ஆட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ இடது ஆதரவாளர்கள் மறுபுறமுமாக உருப்படுத்திக்காட்டும் ஒன்றாக கியூபா சோசலித்துடன் இனங்காட்டப்படும் அந்த மட்டமானது, முதலாளித்துவத்துக்கு சோசலிச மாற்று எனும் கருத்துருவினை கொச்சைப்படுத்தும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், குறிப்பாக இலத்தின் அமெரிக்காவில்.

தொகுப்பு

மார்க்சின் கீழான முதலாம் அகிலம் “தொழிலாளர்களின் விடுதலை தொழிலாளர்கள் தம்மின் பணியாகவே இருக்கவேண்டும்” என்ற முழக்கத்தை சேர்த்தது. அதாவது, இறுதி ஆய்வில் சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் சுயநிர்ணயம் ஆகும். அது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட முடியாதது அல்லது அவர்கள் சார்பாக செயலாற்றும் வேறு வர்க்க சக்திகளால் அவர்களுக்காக வென்று எடுக்கமுடியாதது. அது தொழிலாள வர்க்கம் தனக்காகவும் அனைத்து மனித குலத்துக்காகவும் சமுதாயத்தை மாற்றுவதற்கு, ஒரு வர்க்கமாக ஜனநாயகரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நனவு பூர்வமான போராட்டத்தின் விளைபொருளாக மட்டுமே இருக்கமுடியும்.

1960களில் மற்றும் 1970களில் தொழிலாள வர்க்கத்தை நிராகரித்து, சோசலிசத்துக்கு வசதியான குறுக்குவழியை வழங்கும் மற்றைய அதிபுரட்சிகர வாகனங்களை கண்டுபிடித்திருப்பதாகக் கூறிய அனைத்து வகையான நவநாகரிக தத்துவங்களுக்கும் எதிராக, அனைத்துலக குழு இம்முன்னோக்கை பாதுகாத்தது. முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையிலான ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தத்துவங்களில் ஒன்றுகூட உருப்படியில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்ட போராட்டம் வரலாற்றில் சக்திமிக்கவகையில் நிரூபணமாயிற்று.

அனைத்துலக் குழுவின் விடாப்படியான போராட்டம் பற்றியும் அது காஸ்ட்ரோயிசத்தின் முன் மண்டியிடுவதற்கு மறுத்தமை பற்றியும் ஜோசப் ஹான்சன் கூறியதை நாம் நினைவுகூர்வோம். இந்நிலைப்பாட்டை “இலத்தின் அமெரிக்காவில் அரசியல் தற்கொலை” என அவர் எச்சரித்தார். உண்மையில் என்ன நிகழ்ந்தது? பப்லோவாத திருத்தல் வாதமும் அதன் காஸ்ட்ரோ வாதத்துக்கான ஆதரவும் தீவிரமயப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை தற்கொலை சாகசங்களுக்கு இட்டுச்சென்றது. அதற்காக தொழிலாள வர்க்கம் பெரும் விலைகொடுத்தது.

காஸ்ட்ரோ இசத்துக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலுக்கு கீழ்ப்படுத்தியிருந்த பப்லோவாத செல்வாக்கின் கீழான சக்திகளுக்கு தங்களைப் பொருத்திக் கொள்வதற்குப் பதிலாக, தங்களை ஈவுஇரக்கமற்ற விமர்சனத்துக்கு ஆளாக்கியிருந்தால் என்ன விளைந்திருக்கும்?

நிச்சயமாக அதன் விளைவு குறைந்தபட்சம் குட்டிமுதலாளித்துவத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்ட இயக்கங்களிலிருந்து தற்காலிக தனிமைப்படலுடன் ஒன்றாக நிரூபிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்நிகழ்வில் அவர்கள் தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் மிகவும் முன்னேறிய பகுதிகளைப் பயிற்றுவித்திருக்கமுடியும். இப்போராட்டத்தின் மூலம் தலைமை, புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டக்கூடிய தலைமையை தயாரிப்புச் செய்திருக்க முடியும். இது உலக முதலாளித்துவத்தின் தற்காலிக மறுநிலைப்படுத்தலை சாதிக்க உதவிசெய்யும் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு பதிலாக, இலத்தின் அமெரிக்காவில் உலக சோசலிசப் புரட்சிக்கு சக்திமிக்க தூண்டு விசையை வழங்கியிருக்கமுடியும்.

இந்த மூலோபாய அனுபவத்திலிருந்து நாம் கட்டாயம் பெறவேண்டிய முக்கிய படிப்பினைகள் மார்க்சிஸ்டுகளின் விமர்சன ரீதியான பொறுப்புக்களை குறிக்கிறது. அவர்களது பணி சோசலிசப் புரட்சியினை தன்னியல்பாக நிறைவேற்றும் சிலவகை சக்திகளுக்கு தங்களை அனுசரிப்பது மற்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அல்ல. இன்னும் சொல்லப்போனால், விட்டுக்கொடுக்காத தத்துவார்த்த உறுதிப்பாடு மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு உண்மையைக் கூறுவது ஆகிய இவற்றில் தங்களை தளப்படுத்தியிருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர கட்சிகளைக் கட்டுவதாகும்.

இலத்தின் அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள புறச் சூழ்நிலைகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பொறுப்பெடுக்கப்பட்ட இப்போராட்டம் கோடிக்கணக்கானவர்களின் புரட்சிகர இயக்கத்துடன் ஊடறுத்துச் செல்லக்கூடிய கட்டத்திற்கு பக்குவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான போராட்டத்திலிருந்து இந்த இயக்கம் உட்கிரகித்த படிப்பினைகள் இருபத்தோராம் நூற்றாண்டில் அதனை நிறைவேற்றுவதற்கான தீர்க்கமானவைகளாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்:

கியூபாவில் பெரும் பணிநீக்கங்கள்: காஸ்ட்ரோயிசத்தின் முட்டுச் சந்து

Bill Van Auken

17 September 2010

ஒபாமா மற்றும் காஸ்ட்ரோ அமெரிக்க-கியூபா உறவுகளைச் “சீராக்க” நகர்கின்றனர்

By Bill Van Auken

18 December 2014

அமெரிக்க-கியூப நல்லிணக்கம்: வரலாற்று படிப்பினைகள்

Bill Van Auken and David North

19 December 2014

OAS உச்சி மாநாட்டில் ஒபாமாவும் காஸ்ட்ரோவும்

Bill Van Auken

14 April 2015