ஜனாதிபதி அல்ல… பிரதமர் ஆவதே விருப்பம்: மாயாவதி

லக்னோ: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி., மிஸ்ரா உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். இதனால் மாயாவதி ஜனாதிபதி ஆக உள்ளார் என சமாஜ்வாதி கட்சியினர் கூறினர். அவர்கள் புரளி கிளப்புவதாகவும், தான் பிரதமராக விரும்புவதாகவும் மாயாவதி கூறினார்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு பா.ஜ.க., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி., மிஸ்ரா மற்றும் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ., உமா சங்கர் சிங் ஆகியோர் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தனர். மாயாவதி ஒப்புதலுடன் இச்சந்திப்பு நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நினைவு சின்னங்களை பராமரிப்பது தொடர்பாக இச்சந்திப்பு நடந்ததாக மாயாவதி கூறினார். இந்நிலையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மாயாவதி வாக்குகளை பா.ஜ.,வுக்கு மாற்றியதாகவும், அதற்காக அவரை ஜனாதிபதி ஆக்குகிறார்களா என பார்க்க வேண்டும் என கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி இது குறித்து கூறியதாவது: என்னை ஜனாதிபதியாக்கினால் உத்தர பிரதேசத்தில் அவர்கள் எளிதாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என கனவு காண்கிறார்கள். அதனை சமாஜ்வாதி மறந்துவிட வேண்டும். நான் ஜனாதிபதி ஆக வேண்டும் என கனவு காண மாட்டேன். சொகுசான வாழ்க்கையை நான் எப்போதும் விரும்பமாட்டேன். போராட்டத்தையே விரும்புகிறேன். மீண்டும் உத்தரபிரதேச முதல்வராகவும், ஏன் நாட்டின் பிரதமராக கூட பதவியேற்பேன் என கூறினார்.