ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட் பரவல் 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாத அனுமதி முடிவடைகிறது. கோவிட் தொற்று இன்னும் முழுமையாக குறையாத நிலையில், 3வது அலை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரி, ஸ்டெர்லைட் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க தேவையில்லை” எனக் கூறினார்.