உக்ரைனுக்கு நவீன ராக்கெட் : அமெரிக்கா ஒப்புதல்

ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு நவீன தொழில்நுட்பத்திலான நடுத்தர ராக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உக்ரைனின் மிக முக்கியமான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக நவீன ஆயுதங்களை உடனடியாக வழங்கும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவை வற்புறுத்தி வந்தார்.

இதை ஏற்று ”உக்ரைனுக்கு நவீன தொழில்நுட்பத்தில் நடுத்தரமான ராக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த ராக்கெட்டுகள் ரஷ்ய எல்லையை தாண்டி தாக்குதல் நடத்துவதற்கு தரப்படவில்லை எனவும், ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ’70 கி.மீ., துாரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அமெரிக்க ராக்கெட்டுகள், உக்ரைனுக்குள் புகுந்துள்ள ரஷ்ய ராணுவத்தை விரட்டியடிக்க பயன்படுத்தப்படும்’ என, அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவின் ராணுவ உதவி, உக்ரைனுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.