LYCA ஞானம் கிராமம் திறப்பு விழா

LYCA ஞானம் அறக்கட்டளை, இலங்கையின் வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டத்தின் சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதியில், LYCA ஞானம் கிராமத்தினை உருவாக்கியுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கும் மேலாக பூந்தோட்ட அகதி முகாம்களில் பெரும்சிரமங்களின் மத்தியில் வாழ்ந்துவந்த மக்களின் நிரந்தர வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 220 மில்லியன் ரூபா செலவில் 150 வீடுகள், லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் கட்டப்பட்டுள்ளன.

சின்ன அடம்பன் – ராசபுரம் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் இம்மாதம் (ஏப்ரல்) 10 ஆம் திகதி LYCA ஞானம் அறக்கட்டளையினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

LYCA ஞானம் கிராமம் திறப்பு விழாவில் லைக்கா நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் ஞானம்பிகை அல்லிராஜா, லைக்கா நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா நிறுவனத்தின் செயற்பாட்டு தலைமை அதிகாரி G .T .ஜெயசீலன், லைக்கா குழும வர்த்தக திட்டமிடல் அதிகாரியும் ஞானம் அறக்கட்டளையின் உலகளாவிய மூலோபாய செயற்பாட்டு பணிப்பாளருமான ராஜ்சங்கர் பாலசிங்கம் ஆகியோர் உட்பட நிறுவன உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் முக்கிய அதிதிகளாக பிரித்தானிய ஆளும் கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பறி, தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், செனசி விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கையின் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம் ஹாரிஸ், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார முதலானவர்கள் கலந்து கொண்டனர்.
லைக்கா கிராமம் எனப் பெயரிடப்பட்டுள்ள 150 குடும்பங்களுக்கான இந்த வீட்டுத்திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 26 ஆம் திகதி லைக்கா நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் ஞானம்பிகை அல்லிராஜா, லைக்கா நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் வாழ்வாதாரமின்றி மிகுந்த வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு கைகொடுக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே லைக்கா ஞானம் பவுண்டேஷன் அறக்கட்டளையாகும்.

2010 ஆம் ஆண்டு லைகா மொபைல் மற்றும் அதன் குழுமத்தின் தலைவர் திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் அவரது அன்புத் தாய் ஞானாம்பிகை அல்லிராஜா அவர்களுடன் இணைந்து லைகா ஞானம் அறக்கட்டளையை ஆரம்பித்தார்.

லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் உலகின் பலபாகங்களிலும் உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று எமது தாயகத்தில் அல்லலுறும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் நிரந்தர உறைவிடத்துக்கும் உதவி செய்யம் நோக்குடன் உருவாக்கப்பட்டதே LYCA ஞானம் கிராமம் ஆகும்.