பெண்களின் இடுப்பை வர்ணித்து கண்டனங்களுக்கு உள்ளான லியோனிக்கு தி.மு.க.,வின் கல்வித் துறைக்கு பொறுப்பு !!

தமிழக பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. லியோனி ஆசிரியராக பணியாற்றியவர் தான். பட்டிமன்றம் வாயிலாக பிரபலமாகி, பின் தி.மு.க.,வில் இணைந்தவர். இவரது அரசியல் பேச்சு ரசிக்கத்தக்கதாக இருக்காது; அநாகரிகமாக இருக்கும். இதனால் தேர்தல் காலத்தில் இவர் மீது அவமதிப்பு வழக்குகள் நிறைய போடப்படும்.

கடந்த தேர்தல் பிரசாரத்தில், பெண்களின் இடுப்பை பற்றி வர்ணித்து பலரின் கண்டனங்களுக்கு உள்ளானார். இப்படிப்பட்ட ஒருவரை, பாடநுால் நிறுவனத்துக்கு தலைவராக நியமித்தால் கல்வித் துறையின் நிலை என்னவாகும்? பாடநுால் நிறுவனத்தின் பணி, அறிவை வளர்க்கும் புத்தகங்களை தயாரிப்பது. புதிதாக பொறுப்பேற்றுள்ள லியோனி, ‘பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ‘மத்திய அரசு’ என்ற வார்த்தையை நீக்கி, ‘ஒன்றிய அரசு’ என மாற்றப்படும்’ என கூறி உள்ளார். கற்கும், கற்பிக்கும் திறன் பற்றியும், எவ்வாறு பாட நுால்களின் தரம் மேம்படுத்தப்படும் என்பது பற்றியும் அவர் வாயை திறக்கவில்லை. அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்றும், அவர் சொல்லவில்லை.

‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பிரபலப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான், அவரின் நோக்கமாக இருக்கிறது. ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்’ என திருவள்ளுவர் தெளிவாக கூறி உள்ளார். அதன் பொருள் புரிந்து, முதல்வர் ஸ்டாலின் தன் முடிவுகளை அறிவிக்கலாம். பாடநுால் நிறுவனம் என்பது, பட்டிமன்றம் நடத்தும் மேடையும் அல்ல; அநாகரிகமாக பேச அரசியல் மேடையும் அல்ல… அதில் நம் மாநிலத்தின் கல்வித் தரம், மாணவர்களின் எதிர்காலம் அடங்கி உள்ளது.

லியோனிக்கு ஏதோ ஒரு வாரியத் தலைவர் பதவி கொடுத்து, தி.மு.க., அரசு தன் நன்றிக் கடனைச் செலுத்தி இருக்கலாம். அதை விடுத்து, கல்வி போன்ற முதன்மை துறைகளை கொடுப்பது அழகல்ல. அரசுப்பள்ளிகளின் தரம் கேள்விக்குரியதாக இருக்கும் நிலையில், அதை உயர்த்து-வதற்கான முயற்சிகளை செய்யாமல், அதற்கு ‘திண்டுக்கல் பூட்டை’ போட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.