திருமணத்துக்கு 20 பேர்; மது வாங்க 500 பேருக்கு அனுமதியா?

கேரள அரசு சார்பில் நடத்தப்படும் பெவ்கோ மதுபானக் கடைகள் முன், மது வாங்க ஏராளமானோர் வரிசையில் நிற்கின்றனர். இதை ஒழுங்குபடுத்தக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், கோவிட் சூழலில் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது வாங்குவது குறித்து உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

கோவிட் பரவலைத் தடுக்க திருமண விழாக்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றில் 20 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுவாங்க மட்டும் மதுக்கடைகள் முன் 500க்கும் மேற்பட்டோர் வரிசையில், சமூக விலகலை கடைபிடிக்காமல் நிற்கிறார்கள். இதுதான் கோவிட் கட்டுப்பாடா. நாட்டிலேயே கோவிட் தொற்று தினசரி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலைக் பின்பற்றாமல் மது வாங்க வரிசையில் நிற்பது, கோவிட் பரவலை மேலும் அதிகப்படுத்தும்.

மதுக்கடைகள் முன் மக்கள் கூட்டம் சேருவதை தடுக்க அரசு தவறிவிட்டது. இது அரசின் நிர்வாக செயல்முறை தோல்வி அடைந்ததுள்ளது தெளிவாக தெரிகிறது. இந்த வழக்கை வரும் 16-ம் தேதி ஒத்தி வைக்கிறேன். அப்போது, பெவ்கோ நிறுவனத்தின் மேலாளர், கலால்வரி ஆணையர் ஆன்-லைன் மூலம் ஆஜராக வேண்டும்.இவ்வாறு கேரள அரசை உயர் நீதிமன்ற நீதிபதி கடுமையாகச் சாடியுள்ளார்.