பாலியல் வழக்கில் கேரளாவின் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது !!

கேரளாவில் சக கட்சி பெண் ஊழியரை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு வடகரா பகுதி குழு உறுப்பினராக உள்ள பெண், அக்கட்சியின் பகுதி செயலாளர் பாபுராஜ் மற்றும் கட்சியின் இளைஞர் அணி மண்டல செயலாளர் லிஜேஷ் ஆகிய இருவரும் தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக புகார் அளித்தார். இதையடுத்து இருவரையும் நேற்று (ஜூன் 28) போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கோழிக்கோடு சரக காவல் கண்காணிப்பாளர் ஏ.ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:பாதிக்கப்பட்ட பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாய். மூன்று மாதங்களுக்கு முன் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பாபுராஜ், அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார். அதன் பின், நடந்த சம்பவத்தை அவருடைய கணவரிடம் தெரிவித்துவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணை தொடர் பாலியல் வன்முறை செய்து வந்துள்ளார். இதையறிந்த லிஜேஷும் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த பெண் இதுகுறித்து கடந்த 27ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பாபுராஜ், லிஜேஷ் இருவரையும் கரிம்பனபாலம் அருகே கைது செய்தனர். இதையடுத்து இருவரும் கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பிரச்சனையை மறைக்கவும், சுமுகமாக பேசித் தீர்க்கவும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும், பாதிக்கப்பட்ட பெண் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் போலீசில் புகார் பதிவு செய்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.