கஜகஸ்தான்: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

கஜகஸ்தான் மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது. இதற்கிடையில், அந்நாட்டின் அல்மெடி மாகாணம் அக்பலக் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த நபரை அந்த வீட்டை விட்டு வெளியேற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்த நபரை வீட்டு விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவுடன் கோர்ட்டு அதிகாரி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்த அந்த நபர் போலீசார் மற்றும் கோர்ட்டு அதிகாரி மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் பொதுமக்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அக்பலக் மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.