கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?

இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் 2வது அலையின் தாக்கம் குறைந்து தொற்று எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில் உள்ளது. ஆனால், கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் தொற்று பாதிப்பு பதிவாகிறது. இதனால் கேரளாவில் கோவிட் தொற்றுப் பரவல், அரசின் கையை மீறிச் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சந்தோஷ் குமார் தெரிவித்து உள்ளதாவது:கேரளாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 21 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு உள்ளனர். இது தேசிய சராசரியில் 9.9 சதவீதமாகும். மற்ற எந்த மாநிலத்தையும்விட இது அதிகமாக இருந்தாலும், தொற்றின் வேகம் குறையவில்லை. வைரஸ் பாதிப்பில் கேரளா எந்த இடத்தில் இருக்கிறது என ஆய்வு செய்வது அவசியம்.

ஒட்டுமொத்த பாஸிட்டிவ் விகிதம் கடந்த 6 வாரங்களாக 10 முதல் 12 சதவீதத்துக்குள் இருக்கிறது. நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், தொற்றின் தீவிரத் தன்மை குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் 250 முதல் 300 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கேரளா முழுவதும் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெறுவது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

ஐ.சி.எம்.ஆர்., அமைப்பின் 4வது செரோ சர்வே ஆய்வில், ‘கேரளாவில் 42.7 சதவீதம் பேருக்கு மட்டுமே கோவிட் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. தேசிய அளவில் 67.6 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆன்ட்டிபாடி இருக்கிறது’ எனத் தெரியவந்துள்ளது. அதாவது, கேரளாவில் இன்னும் 48 சதவீதம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது. இந்திய அளவில் 33 சதவீதம் பேருக்கு வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.