குறைந்த நேரத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்களுக்கு வேக்சின் செலுத்தி இந்தியா பெரும் சாதனை !!

உலகத்திலேயே அதிகளவு தடுப்பூசி செலுத்திய நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கோவிட் பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (ஜூன் 28) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 ‛டோஸ்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து அதிக தடுப்பூசி செலுத்தியதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியது. அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தநிலையில், 32.33 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்த இடங்களில், பிரிட்டனில் 7.67 கோடி தடுப்பூசிகளும், ஜெர்மனியில் 7.14 கோடி தடுப்பூசிகளும், பிரான்ஸில் 5.24 கோடியும், இத்தாலியில் 4.96 கோடியும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளும் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திலேயே தடுப்பூசி செலுத்த துவங்கிவிட்டன.

இதன்மூலம் குறைந்த காலத்தில் அதிக தடுப்பூசி செலுத்தி அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா. உலகிலேயே அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 117 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.