ஐ.நா.,வில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா, பிரான்ஸ் பாராட்டு

தற்போது போருக்கான காலம் அல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடியை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை பாராட்டு தெரிவித்துள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது இருவரும், உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரம் தொடர்பாக விவாதித்த போது, புடினிடம் தற்போது போருக்கான காலம் இதுவல்ல என மோடி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாவது: தற்போது போருக்கான காலம் இதுவல்ல என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியது சரியானது. கிழக்கத்திய நாடுகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பது அல்லது மேற்கத்திய நாடுகளை பழிவாங்குவதற்கான நேரம் அல்ல. இது அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்டி, அனைவருக்குமான பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைக்கும் காலமாகும். அதுதான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளை மாளிகையின் சுல்லிவன் வெளியிட்ட செய்தி: பிரதமர் மோடியின் கூறியது, சரியானது மற்றும் நியாயமானது என அவர் நம்பும் கொள்கையின் பேச்சை அமெரிக்கா வரவேற்கிறது. ரஷ்யாவுடன் நீண்ட காலமாக அனைத்து மட்டத்திலும் நட்புறவு வைத்திருக்கும் இந்திய தலைமை, போரை முடிப்பதற்கான நேரம் இது என தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.

போருக்கான காலம் இதுவல்ல என புடினை வலியுறுத்திய பிரதமர் மோடியை ஐக்கிய நாடுகள் சபை மட்டுமின்றி, அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களும் பாராட்டியிருந்தன