இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும் – மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தை நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக, முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும். இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும், அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும்.
அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக சேவையாற்ற இதுவரை 86,550 பேர் பதிவு செய்துள்ளனர். வருகிற கல்வியாண்டில் 1 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.