பள்ளி, கல்லூரிகளில் முழு கண்காணிப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மாணவர்கள் குழுவாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர்கள் வந்து செல்வதற்கு தனித்தனி நுழைவு வாயில்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களோடு தொடர்பு வைத்துள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முழுமையான முறையில் அமல்படுத்தப்படுவதை அனைத்து துறை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.