மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா


மும்பையில் அதிகரிப்பு

மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏற்பட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்படி புதிதாக 2 ஆயிரத்து 172 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியானார்கள்.

இதேபோல மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு திடீரென எகிறி உள்ளது. இங்கு நேற்று ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஒமைக்ரான் பாதிப்பு இல்லை
மும்பையில் 7 மாதங்களுக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். நகரில் கடந்த 15-ந் தேதி 238 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்து தற்போது 1,000-ஐ தாண்டி கிலியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மராட்டியத்தில் நேற்று புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. நேற்று முன்தினம் வரை 167 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.