ஆப்கானிஸ்தான் விவகாரம்; 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது.

அதன்படி, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி பர்ஹட் ஜோஷி இது தொடர்பான கூடுதல் விரங்களை விரைவில் வெளியிடுவார்’ என பதிவிட்டுள்ளார்.