உன்னால நான் கேட்டேன் !! என்னால நீ கேட்ட !! தமிழக பா.ஜவும் … அதிமுகவும் !!

நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் உங்களால் தான் தோற்றோம் என கூட்டணியில் உள்ள அதிமுக, பா.ஜ., மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறது.

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை.நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம்’ என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.,வின் கே.டி.ராகவன், ‘அதிமுக.,வால் தான் பா.ஜ., தோல்வி அடைந்ததாக’ குறிப்பிட்டிருந்தார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: பா.ஜ.,விற்கு எதிரான சி.வி.சண்முகத்தின் பேச்சு அதிகாரப்பூர்வமானது இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடர்வதா, இல்லையா என்பதை அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும். நானோ, சி.வி.சண்முகமோ கூட்டணியை தீர்மானிக்க முடியாது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து தெரியவரும். சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிமுகவை யாரும் வலியுறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக – பா.ஜ., கூட்டணி குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழகத்தின் நலன் கருதியும் அதிமுக – பா.ஜ., கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.’ என உறுதிப்படுத்தி பதிவிட்டுள்ளார்.