வரிகட்டு ஜோசப் விஜய் – நடிகர் விஜய்க்கு சென்னை ஹை கோர்ட் 1 லட்சம் அபராதம் !!

சொகுசு காருக்கு வரி விதிக்க தடைகேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக, வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டாக் வைரல் ஆகி டிரெண்ட் ஆனது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். பாக்ஸ் ஆபிசிலும் நம்பர் 1 நடிகராக உள்ளார். அதோடு தற்போதைய நிலவரத்தில் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ‛‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு” என கண்டித்தார்.

விஜய்க்கு சென்னை ஐகோர்ட் அபராதம் மற்றும் கண்டனம் தெரிவித்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #actorvijay, #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இதில் பதிவான சில கருத்துக்கள்..

‛‛மாசம் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறவன் கூட ஒழுங்கா வரி காட்டுவான்… 100 கோடி வாங்கி என்ன பிரயோஜனம்”. ‛‛கோடிகளில் சம்பளம் வாங்கும் உங்களால் சில லட்சங்களில் வரி கட்ட முடியாதா… ஊருக்கு தான் ஹீரோ, உள்ளுக்குள்ள ஜீரோ…”. ‛‛தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் எல்லாம் அரசாங்கத்தை பற்றி ஏகத்திற்கும் விமர்சனம் செய்யும் இவர், முதலில் ஒழுங்காக வரி கட்டிவிட்டு பின்னர் மற்றவர்களை குறை சொல்லட்டும்”. ‛‛நாங்க ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் வச்சுருக்கோம், சொகுசு கார் அல்ல, அதனால் வரி கட்ட மாட்டோம்…”.

‛‛விஜய் முதலில் சரியான வக்கீலிடம் ஆலோசனை கேட்க வேண்டும். நாட்டுக்கு வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை. அதை செய்யாவிட்டால் அபராதம், சிறை தண்டனை விக்கப்படும். பிறகு எதற்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் விஜய். ஒருவேளை இந்த விஷயம் கூட அவருக்கு தெரியாதோ…”. இப்படி பலரும் கருத்து பதிவிட்டு வருவதோடு வேடிக்கையான பல மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.