‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை இப்படத்திலிருந்து விலகும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை எதிர்கொண்டு வென்றிருக்கிறேன். இந்தப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை படமாக்க சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போது அதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தடைகளை கடந்து இந்த படைப்பு வெளிவரும் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ளது. அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

முரளிதரனின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி தனது டுவிட்டரில் நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்தார் நடிகர் விஜய்சேதுபதி. சில தினங்களுக்கு முன் முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையடுத்து விஜய்சேதுபதி நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் வெளியே வந்த அவரிம், செய்தியாளர்கள் 800 படம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘நன்றி, வணக்கம்’ என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார் விஜய் சேதுபதி.

இதன்மூலம் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.