6 லட்சம் கிராமங்கள் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பெங்களூரு,-”நாட்டில் ஆறு லட்சம் கிராமங்களை ‘பிராட்பேண்ட்’ எனப்படும் அகன்ற அலைவரிசை வாயிலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ மின்னணு உற்பத்தி, ‘செமிகண்டக்டர்’ எனப்படும், ‘சிப்’களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ‘செமிகான் இந்தியா’ மாநாட்டை நடத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில், செமிகான் இந்தியா முதல் மாநாடு நேற்று துவங்கியது. இதை ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில், ௧௩௦ கோடிக்கும் அதிகமான இந்தியர்களை இணைப்பதற்கான ‘டிஜிட்டல்’ கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

நிதி சேவை மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா மாபெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில், பிராட்பேண்டுகள் வழியாக, ஆறு லட்சம் கிராமங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலபதிபர்தொழில் துவங்குவதை எளிதாக்க, இந்தியா விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

உலகளாவிய செமிகண்டக்டர் வினியோக சங்கிலியில், இந்தியாவை முக்கிய பங்குதாரர் நாடாக மாற்றுவதே நம் நோக்கம். கொரோனா பெருந்தொற்று பாதிப்பை மனிதகுலம் எதிர்கொண்டு வரும் வேளையில், மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறை வரலாறு காணாத வளர்ச்சி அடையும். தொழில்துறை கடினமாக பாடுபட்டால், அரசு அதைவிட கடினமாக பாடுபடும். புதிய உலக நடைமுறை உருவாகி வருவதற்கேற்ப, புதிதாக உருவாகும் வாய்ப்புகளை, நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியா என்றால் வர்த்தகம் என அர்த்தம் கொள்ள பாடுபட்டு வருகிறோம்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலம் சூரத்தில் சர்வதேச படிதார் வர்த்தக மாநாட்டை, வீடியோ கான்பரன்ஸ் வழியாக துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ”சாதாரண மக்களை தொழிலபதிபர்களாக மாற்றும் நோக்கில், அரசு செயல்பட்டு வருகிறது,” என்றார்.