50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜூலை 11-ம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுடன் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு தீர்மானித் துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடை பெற்று வருகிறது. 75-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
வழிநடத்த குழு அமைப்பு
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு சார்பில் கீரமங்கலத்தில் நேற்று கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்துவதற்காக 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மேலும், ஜூலை 11-ம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டி புதுக் கோட்டை ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற திரைப் பட இயக்குநர் கவுதமன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு ரத்து செய்தால், மத்திய அரசு செயல்படுத்தாது என மத்திய அமைச்சர்கள் தெரி வித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு உடனே இத்திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
கருத்து கேட்புக் கூட்டத்தில், ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் டி.புஷ்பராஜ், எஸ்.ராஜசேகரன், முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் த.செங்கோடன், திருஞானம் உள்ளிட்டோருடன் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.