50 சதவீத இட ஒதுக்கீட்டில் தீர்ப்பு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீடுக்கு பெற்றுத் தராததற்காக தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி தலா ரூ.1 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக மிகப்பெரிய தலைகுனிவை அரசு சந்தித்துள்ளது.
இந்தத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. இத்தீர்ப்பின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தாமல் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர இயலும். இது ஒரு வரப்பிரசாதமாகும்.
ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பில் கூட சில போதாமைகள் உள்ளன. தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 கோடி அபராதம் மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் செலுத்தப்பட வேண்டும். அரசுக்கு தான் தண்டம் விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர தமிழகத்தை சுரண்டிக் கொழுத்த திராவிட ஆட்சியாளர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆட்சியாளர்களும், அவர்களுடன் கூட்டணி அமைத்து கொள்ளையடித்த தனியார் கல்வி நிறுவனங்களும் தண்டனையிலிருந்து தப்பிவிட்டாலும் காலதேவன் நிச்சயம் தண்டிப்பான்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.