5 குழந்தை பெற்று கொள்ளுங்கள்: பா.ஜ., எம்எல்ஏ வேண்டுகோள்

குழந்தை என்பது கடவுளின் பிரசாதம். ஒவ்வொரு இந்துவும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்த எம்எல்ஏ சுரேந்திர சிங்தான், கடந்த இரு மாதங்களுக்கு முன், இதேபோன்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். அதாவது, இப்போது ராமர் பூமியில் இருந்தால்கூட பலாத்காரத்தை தடுக்க முடியாது என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

உத்தரப்பிரதேச்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அந்த மாநிலத்தில் பைரியா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் சுரேந்திர சிங்.

பாலியா நகரில் சுரேந்திர சிங் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குழந்தை என்பது கடவுளின் பிரசாதம். ஒவ்வொரு இந்துவும் குறைந்தபட்சம் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண்கள் குழந்தைகளும், கூடுதலாக ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சமநிலைத் தன்மையை கடைப்பிடிக்காவிட்டால், இந்தியாவில், இந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். இந்துக்கள் வலிமையாக இருக்கும்போதுதான் இந்தியா வலிமையாக இருக்கும். இந்துக்கள் பலவீனமடையும்போது, இந்தியாவும் பலவீனமடையும்.

இந்துக்களின் செயல்பாடுகளால்தான் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருகிறார்கள். இவ்வாறு சுரேந்தர் சிங் தெரிவித்தார்.