5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பா.மாரியப்பன், கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறையில் பணியாற்றி வருபவர் பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன். விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 17 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தனியார் மருத்துவமனைகளில் இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை (Beating Heart CABG) அரசு பொது மருத்துவமனையில் செய்ய இவர் திட்டமிட்டார். இதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு டாக்டர்கள் செய்யும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டார்.

ஆரம்பத்தில் தனது சொந்த செலவில் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு வாங்கினார். கடந்த 5 ஆண்டுகளில் தனது குழுவினருடன் சேர்ந்து மாரடைப்பு நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும் போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக டாக்டர் பா.மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன. அரசு பொது மருத்துவமனைகளில் இதயத்தின் துடிப்பை நிறுத்தித்தான் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்தாலும், அவை வெற்றி பெறுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறானது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பு நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும்போதே நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதில் 97 சதவீதம் வெற்றி அடைந்துள்ளோம். ஆண்டுக்கு சுமார் 150 நோயாளிகளுக்கு நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இரண்டரை மணி நேரம்
பழைய முறைப்படி இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யும்போது இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படும். நுரையீரலின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்படும். அறுவை சிகிச்சை செய்ய 4 மணி நேரம் ஆகும். சிகிச்சை நடைபெறும் 4 மணி நேரமும் இதயம், நுரையீரலின் வேலைகளை அருகில் இருக்கும் ரூ.1 கோடி மதிப்பிலான இயந்திரம் செய்துகொண்டிருக்கும். ஆனால், இந்த நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையின்போது இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படாது. நுரையீரலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். ரூ.1 கோடி மதிப்புள்ள இயந்திரமும் தேவையில்லை. இரண்டரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை செய்து முடித்துவிடலாம்.

ரூ.4 லட்சம் செலவாகும்
இந்த நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்ய ரூ.4 லட்சம் வரை செலவாகும். இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக செய்யப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தேவையான உபகரணங்கள் வாங்கப்படுகின்றன. கடந்த 17 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நவீன பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு டாக்டர் பிரேம், செவிலியர் ஜமுனா உள்ளிட்ட பலர் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்றார்.

மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, ஆர்எம்ஓ இளங்கோ, நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்த நோயாளிகள் உடன் இருந்தனர்.