47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது.

ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது.

இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்.

ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அதாவது, 13 ஆப்பிரிக்க நாடுகள், 13 ஆசியா-பசிபிக் நாடுகள், 8 லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள், 7 மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள், 6 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 47 நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இது கூட தெரியாத இம்ரானுக்கு கணக்கு பாடம் தேவை என சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளானார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலளிக்கையில், 47 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அந்த நாடுகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என கூறினார்.