நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

பஇந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்’ என, ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில், கோவிட் 3வது அலையை கணித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர் கூறுகையில், ‘கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3வது அலை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனால், 2வது அலையைப் போல், 3வது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு இருக்காது. 2வது அலையில் தினமும் அதிகபட்சமாக 4 லட்சம் வரை பாதிக்கப்பட்டனர். ஆனால், 3வது அலையில் ஒரு லட்சம் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்’ என்றார்.

கோவிட் 2வது அலை ஏற்படுவது குறித்து, இந்த இரு ஆய்வாளர்களும் கணித ரீதியிலான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டது போல் 2வது அலையின் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.