30 சதவீத பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி ‛சீட்’ தராது

பா.ஜ., எம்.பி.,க்களில் 30 சதவீதம் பேரை புறக்கணிக்க கட்சி எண்ணி உள்ளது. சீட் மறுக்கப்படுவோரின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்குமே தவிர, குறையாது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ‛‛நான் மத்திய அமைச்சர், நான் மூத்த தலைவர்” என்றெல்லாம் கூறிக்கொண்டு யாரும் இனி சீட் கேட்க முடியாதாம். யாராக இருந்தாலும் வெற்றி பெற மாட்டார் என கருதப்படும் நபருக்கு நிச்சயமாக மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காதாம்.2014 தேர்தலில் பா.ஜ.,வுக்கு 282 எம்.பி.,க்கள் கிடைத்தனர். இவர்களில் 160 பேர், மோடி அலையை பயன்படுத்தி முதன்முறையாக எம்.பி., ஆனவர்கள். இந்த 160 பேரில் பலருக்கு அவரவர் தொகுதியில் சரியாக செயல்படவில்லை. பா.ஜ., சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.மோடி பிரதமர் ஆக வேண்டுமானால் இந்த 160 பேரில் பலர் மீண்டும் போட்டியிடக் கூடாது என்றும் இவர்களே மீண்டும் போட்டியிடுவதை விட புதுமுகம் யாராவது போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என கட்சி கருதுகிறதாம். பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பிறகு மோடியின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்துவிட்டது என்று பா.ஜ., உறுதியாக நம்புகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயிக்கலாம் என்று நினைத்த ‛சோம்பேறி’ எம்.பி.,க்கள், சீட் கிடைக்காது என்பதால் கவலையில் இருக்கின்றனர்.
உ.பி.,யில் உள்ள உன்னாவ் தொகுதி பா.ஜ., எம்.பி., சாக்சி மகராஜ் கட்சி அம்மாநில பா.ஜ., தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தொகுதியின் நிலவரம், ஜாதிகளின் எண்ணிக்கை போன்றவற்றை குறிப்பிட்டு, தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளாராம். அமித்ஷாவே எல்லாம் எம்.பி.,க்கள் பட்டியல் தயாரிப்பில் அமித்ஷா ரொம்ப கறாராக இருக்கிறாராம். கட்சி நடத்திய ஆய்வில் நல்ல ‛மார்க்’ வாங்காதவர்களுக்கு மீண்டும் சீட் இல்லையாம்.
இந்த தேர்தலில் விதிஷா தொகுதியை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா காலி செய்கிறார். அந்த இடத்தில் மாஜி ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சவுகான் போட்டியிடுவார் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் போட்டியிட மாட்டார் என்கிறார்கள். ‛‛தொடர்ந்து மாநில அரசியலில் கவனம் செலுத்த விரும்புவதால் டில்லிக்கு வர விரும்பவில்லை” என்று சவுகான் கூறிவிட்டாராம்.
அதே ம.பி.,யில் போபால் தொகுதியில் மூத்த காங்., தலைவர் திக்விஜய்சிங் போட்டியிடுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.