3-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: குறைந்த அளவில் இயங்கும் பேருந்துகள்; பரிதவிக்கும் மக்கள்

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. மாநிலம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியப் பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அமைச்சர் பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக்கைக்காக பல விதமான போராட்டங்களை நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் இறுதிகட்டமாக நேற்றுமுன்தினம் நடந்த பேச்சு வார்த்தையைக் கெடுவாக வைத்தனர்.

2.57 சதவீத உயர்வை தர மறுத்த தமிழக அரசு 2.4 சதவீதத்திலேயே நின்றது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். அவர்களது வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பேருந்துகள் இயங்கவில்லை.

90 சதவீத பேருந்துகள் இன்று இயங்காததால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை, மதுரை, கோவை என தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்றும் பேருந்து சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். வெளியூர், உள்ளூர் என அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

எனினும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களால் சில பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் பயணத்திற்கு ஷேர் ஆட்டோ மற்றும் வேன்களுக்காக காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. அரசு பேருந்துகள் இயக்கப்படாதததால்,,சென்னை புறநகர் மின்சார ரயில்களில் வழக்கத்தைவிடவும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்களுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அதேசமயம் தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால் தற்காலிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக ஊழியர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

இதனிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.