20 தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயார்

தமிழகத்தில், காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதி தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., தயாராகி வருகிறது. 20 தொகுதிகளுக்கும், அமைச்சர்கள் தலைமையில், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் மறைவு காரணமாக, திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாகின.’தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 18 சட்டசபை தொகுதிகளும், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, 18 பேரும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால், 18 தொகுதிகளில், தேர்தல் நடத்த இயலாத நிலை ஏற்படும். மேல் முறையீடுக்கு செல்லாவிட்டால், காலியாக உள்ள, 20 தொகுதிகளுக்கும், ஆறு மாதங்களுக்குள், தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மேல் முறையீடு செய்ய, 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், என்ன முடிவெடுப்பது என்பதில், தினகரன் கட்சியில், குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில், 20 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் அறிவிக்கப் பட்டால், அது, மினி சட்டசபை தேர்தல் போல் அமையும். அதில், அ.தி.மு.க., குறைந்தது ஏழு தொகுதிகளிலாவது வென்றாக வேண்டும். இல்லையெனில், ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்படும். இதை உணர்ந்துள்ள, அ.தி.மு.க., தலைமை, அனைத்து கட்சிகளுக்கும் முன், 20 தொகுதிகளிலும், தேர்தல் பணிகளை துவக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, 20 சட்ட சபை தொகுதிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘இக்குழுவிற்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முழு ஒத்துழைப்பு அளித்து, சிறப்பான முறையில், தேர்தல் பணியாற்ற வேண்டும்’ என, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னையில், நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில்,முதல்வர், துணை முதல்வர் தலைமையில், இடைத்தேர்தல் குறித்து, திடீர் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்த போது, முதல்வர் மீதான ஊழல் வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்த தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள், பட்டாசு வெடித்தனர்; அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

ராஜினாமா செய்ய தயார்: கருணாஸ், ‘லொள்ளு!’
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு கருணாஸ் அளித்த பேட்டி: தமிழக அரசு, பா.ஜ., அரசுக்கு அடிமை அரசாக செயல்பட்டு வருகிறது. சபாநாயகரிடம் இருந்து, இதுவரை எந்த ஒரு கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியாத இந்த அரசில், எம்.எல்.ஏ.,வாக தொடர விரும்பவில்லை. எம்.எல்.ஏ., ஆனது, அனைத்து பிரிவிலும் கமிஷன் பெற்று, அரசுக்கு ஆதரவு கொடுக்க அல்ல. எப்போதும் பதவியை விட தயாராக உள்ளேன். தமிழகத்தில், எந்த தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிடுவேன்.