‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, அந்த கட்சியின் ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோசடி தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, ராஜா உட்பட பலர் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் வீடு, கலைஞர், ‘டிவி’ வட்டாரங்களில் பீதி நிலவுகிறது.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஊழல் நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

ரூ.1.76 லட்சம் கோடி

இந்த ஊழல் காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அதில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ.,

இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்து உள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்கு, கைமாறாக, தி.மு.க.,வுக்கு சொந்தமான, கலைஞர், ‘டிவி’க்கு, டி.பி., குரூப் நிறுவனம், 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கும், இதில் அடக்கம்.

இந்த வழக்குகளை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார். சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், முதல் வழக்கில், ராஜா, கனிமொழி, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பெஹுரா, ராஜாவின் முன்னாள் தனிச் செயலர், ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட, 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.